சுறாக்கள் பாதுகாத்த உலகின் அதிபயங்கர சிறைச்சாலை.. மீண்டும் திறக்க ட்ரம்ப் திட்டம்
05 May,2025
சுறாக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கடல் பகுதிக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் அதிபயங்கர அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அல்காட்ராஸ் சிறைச்சாலை, அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கோட்டையாக இருந்த இது 1912 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவ இராணுவ சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.
பின்னர் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பின்னர், 1934 ஆம் ஆண்டு இது ஆபத்தான கைதிகளை அடைக்கும் சிறையாக மாற்றப்பட்டது. மூன்று மாடி சிறைச்சாலை அமெரிக்காவிலேயே மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாக நம்பப்பட்டது.
அல்காட்ராஸ் சிறைச்சாலை அதன் தனிமை, குளிர்ந்த நீர், வலுவான கடல் நீரோட்டங்கள் மற்றும் சிறையை சுற்றிலும் திரியும் சுறாக்கள் ஆகியவை காரணமாக மிகவும் பாதுகாப்பான சிறையாக கருதப்பட்டது.
குறிப்பாக கைதிகள் யாரும் தப்பித்து நீந்திச் செல்ல வேண்டும் என்றால் அது கனவிலும் சாத்தியப்படாத ஒன்றாக இருந்தது. ஏனென்றால் நூற்றுக்கணக்கான சுறாக்கள் கூட்டம் இந்த அல்காட்ராஸ் சிறையை சுற்றிலும் காணப்படும்.
பிரதான சிறைச்சாலைக் கட்டிடம் மூன்று தளங்களைக் கொண்டிருந்தது, அதில் நான்கு சிறைத் தொகுதிகள், வார்டன் அலுவலகம், ஒரு வருகை அறை, ஒரு நூலகம் மற்றும் ஒரு முடிதிருத்தும் கடை ஆகியவை அடங்கும்.
மிகவும் ஆபத்தான குற்றவாளிகளுக்கான கடைசி புகலிடமாக அல்காட்ராஸ் சிறைச்சாலை இருந்தது. அதிக பராமரிப்பு செலவுகள் மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகள் காரணமாக அல்காட்ராஸ் சிறைச்சாலை 1963 இல் மூடப்பட்டது.
இந்த நிலையில் அல்காட்ராஸ் சிறைச்சாலையை நவீனப்படுத்தி மீண்டும் திறப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்த தகவல்கள் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்படுகிறது.