இஸ்லாமாபாத்: இந்தியா உடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் திடீரென்று பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் தலைவராக செயல்பட்டு வரும் அசீம் மாலிக் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி தாக்குதல் நடத்தி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டு கொன்றனர். ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பு என்பது ‛லஷ்கர் இ - தொய்பா' பயங்ரகவாத அமைப்பின் துணைப்பிரிவாகும்.
இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் நம் படை வீரர்களுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை என்பது நடந்து வருகிறது. மேலும் பாகிஸ்தான் மீது எப்போது வேண்டுமானாலும் நம் நாட்டு படை
வீரர்கள் பலமான தாக்குதல்களை நடத்தலாம். இதற்காக முப்படைகளும் தயாராக உள்ளன. இதனால் நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மிஸ்ஸாகும் ஷெபாஸ் ஷெரீப்
இந்த மோதலுக்கு நடுவே தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்த்து மீண்டும் அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 2 விஷயங்கள் சொல்லப்படுகின்றனர்.
இதில் முதலாவது காரணம் என்னவென்றால் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். அதாவது நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த 22ம் தேதி முதல் சில நாட்கள் அடுத்தடுத்து மீட்டிங் உள்பட பொதுவெளியில் தென்பட்ட ஷெபாஸ் ஷெரீப் தற்போது மாயமாகி உள்ளார். அவர் மக்கள் முன்பு தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. இது முதலாவது காரணம்.
தேசிய ஆலோசகராக அசீம் மாலிக்
2வது காரணம் என்னவென்றால் பாகிஸ்தான் உளவுப்பிரிவாக உள்ள ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவர் அசீம் மாலிக்கிற்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பு. அதாவது அசீம் மாலிக் தற்போது திடீரென்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் உளவுப்பிரிவின் தலைவராக செயல்படுவதுடன் கூடுதலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலும் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லெப்டினன்ட் ஜெனரலராக ஐஎஸ்ஐ உளவுப்பிரிவு தலைவராக உள்ள அசீம் மாலிக் 2025 அக்டோபர் மாதம் ஓய்வு பெற உள்ளார்.
இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது தேசிய ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஆலோசகர் பதவி என்பது மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் பாதுகாப்பு அம்சத்தில் இந்த பொறுப்பு பெரிய பங்கு வகிக்கும். . நம் நாட்டை பொறுத்தவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் இருக்கிறார். அஜித் தோவல் போன்று பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு அசீம் மாலிக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் தான் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இது தான் தற்போது சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
3 ஆண்டுக்கு பின் நியமனம்
ஏனென்றால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியம். ஆனாலும் கூட பாகிஸ்தானில் கடந்த 2022ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்த பொறுப்பு காலியாகவே வைக்கப்பட்டு இருந்தது. இந்த காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த பலூசிஸ்தான் விடுதலை கோரும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு குடைச்சல் கொடுத்தாலும் கூட இந்த பொறுப்பிற்கு யாரும் நியமிக்கப்படவில்லை. ஆனால் இப்போது இந்தியா உடன் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த பொறுப்பு என்பது அசீம் மாலிக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்பதும், ஒரு நாட்டின் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் என்பது மிகப்பெரிய ரோலாகும். இந்த பொறுப்புகளில் தனித்தனி அதிகாரிகள் தான் நியமனம் செய்யப்படுவார்கள்.
ஆனால் பாகிஸ்தானில் தற்போது அசீம் மாலிக் வசம் இந்த 2 பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்ஷெரீப்பை டம்மியாக்கி ராணுவ அதிகாரியான அசீம் மாலிக் முழு கட்டுப்பாட்டை கையில் எடுக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி இது பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அரசை கவிழ்ப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கலாம். இந்தியா பதிலடி கொடுக்கும்பட்சத்தில் அதில் பாகிஸ்தான் நிலைக்குலைந்து போனால் ராணுவம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானில் புதிது அல்ல
மேலும் பாகிஸ்தானில் ராணுவம் அரசை கவிழ்ப்பது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு முன்பும் பலமுறை நடந்துள்ளது. மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரஃப்பை எடுத்து கொள்ளலாம். பாகிஸ்தானும், இந்தியாவும் ஒன்றாக இருந்த சமயத்தில் கடந்த 1943ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் தான் பர்வேஸ் முஷாரஃப். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது நம் நாட்டை விட்டு வெளியேறினார். பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரஃப் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். குறுகிய காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தில் நல்ல பெயர் பெற்றார். 1990ல் ராணுவ தளபதியானார். துணை ராணுவ செயலர், ராணுவ இயக்குநர் ஜெனரல் உள்ளிட்ட பதவிகளை எட்டிப்பிடித்தார்.
1999ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் இருந்தார். இவர் யார் என்றால் தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் அண்ணன் தான். 1999ல் நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. இது கார்கில் போராக மாறியது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃப் கார்கில் போருக்கு பர்வேஷ் முஷாரஃப்பை தலைமை தாங்க உத்தரவிட்டார். பர்வேஷ் முஷாரஃப் தலைமை தாங்கி இந்தியாவை எதிர்க்க தொடங்கினார். இறுதியில் அந்த போரில் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத்தை வீழ்த்தி நம் நாட்டு ராணுவம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இதையடுத்து கார்கில் போர் தோல்வியை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக பர்வேஸ் முஷ்ரஃப் திருப்பினார். அமெரிக்காவின் பேச்சை நவாஸ் ஷெரீஃப் கேட்டு போரை முடக்கிவிட்டார். இல்லாவிட்டால் பாகிஸ்தான் வென்று இருக்கும் என்று மக்களிடம் கூறினார். அதோடு நவாஸ் ஷெரீஃப்புக்கு எதிராக ராணுவத்தை ஒன்றிணைந்து ராணுவ புரட்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். நவாஸ் ஷெரீஃப்பின் ஆட்சி கவிழ்ந்தது. பாகிஸ்தான் அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பொறுப்பேற்றார். அதன்பிறகு கூட அவர் தான் வகித்த ராணுவ ஜெனரல் பதவியை ராஜினாமா செய்யாமல் அதிபராக இருந்தார். 2008 ம்ஆண்டு வரை அதிபராக பர்வேஷ் முஷாரஃப் பாகிஸ்தானை கட்டுப்படுத்தினார்.
அதற்கு முன்பாக என்று எடுத்து கொண்டால்1971ம் ஆண்டில் வங்கதேசத்தை உருவாக்குவதற்காக நடந்த இந்தியா - பாகிஸ்தான் போருக்கு பிறகு 1977 ம் ஆண்டில் ராணுவ ஜெனரல் ஜியா உஉல் ஹக், பிரதமர் ஜூல்பிஹர் அலி பூட்டோவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார். அதற்கு முன்பாக ராணுவ ஜெனரல் யாக்யா கான், 1958 ம் ஆண்டில் ராணுவ ஜெனரல் அயூப் கான் ஆட்சியை கைப்பற்றி இருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.