இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தான் இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் ஏவுகணைகள், அணுஆயுதங்கள் உள்ளது. இந்தியாவை நோக்கி மட்டும் 130 அணுஆயுதங்களை வைத்துள்ளோம் என்று மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இருநாடுகள் இடையேயான பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர். 22 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது.
விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஏவுகணைகள், போர் விமானங்கள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி நம் நாட்டின் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தால் இந்தியா முழுநேர போருக்கு தயாராகி வருவதாக அர்த்தம். இந்தியாவுக்கு என்று தனியாக ஆயுதக்கிடங்கை வைத்துள்ளோம். அதில் கோரி, ஷாகின் மற்றும் காஸ்னவி ஏவுகணைகள் உள்ளன. 130 அணுஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த 130 அணுஆயுதங்கள் இந்தியாவை இலக்காக வைத்துள்ளது.
எங்களிடமும் ராணுவ ஆயுதங்கள் உள்ளன. ஏவுகணைகள் வைத்துள்ளோம். அணுஆயுதம் இருக்கும். இவை அனைத்தும் வெறும் காட்சி பொருளாக மட்டும் நாங்கள் வைத்திருக்கவில்லை. நாட்டில் நாங்கள் எங்கெல்லாம் அணுஆயுதம் வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. நான் மீண்டும் சொல்கிறேன் எங்களிடம் பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளது. அது உங்களை இலக்காக கொண்டு தாக்கும்'' என வாய்ச்சவடால் விட்டுள்ளார்.
பாகிஸ்தான் நம்நாட்டை ஒப்பிடும்போது ராணுவம், விமானப்படை, கப்பற்படையில் வலிமை குறைந்து காணப்படுகிறது. பாகிஸ்தானை போல் நம் நாட்டிடமும் அணுஆயுதம் என்பது உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணுஆயுதத்தை கையில் எடுத்தால் நம் நாடும் நிச்சயம் அதனை இறக்கும். பொதுவாக இப்போது எந்த நாடுகளும் அணுஆயுதத்தை பயன்படுத்துவது இல்லை. ரஷ்யா- உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா போர் என்று வருடக்கணக்கில் நடக்கும் போரில் கூட அணுஆயுதம் பயன்படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஒவ்வொரு நாடுகளிடமும் இருக்கும் அணுஆயுதம் வெறும் காட்சிப்பொருளாகவும், மிரட்டல் விடுக்கும் பொருளாகவும் மட்டும் தான் உள்ளது.
இருப்பினும் பாகிஸ்தானின் இந்த அணுஆயுத மிரட்டலுக்கு பின்னால் நம் நாட்டின் மீதான பயம் தான் உள்ளது. எங்கே பாகிஸ்தானை இந்தியா தாக்கிவிடுமோ? என்ற அச்சம் பாகிஸ்தானியர்களிடம் அதிகம் உள்ளது. இந்த பீதியை மறைக்க தான் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அணுஆயுதம், போர் விமானம், ஏவுகணை என்று பூச்சாண்டி காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஒன்றும் உள்ளது.
அதாவது காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து நம் நாடு பாகிஸ்தானுக்கு எதிராக சில அதிரடி முடிவுகளை எடுத்தது. அதன்படி சிந்து நதி நீரை நிறுத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. இது பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மாற உள்ளது. அதேபோல் அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களை உடனடியாக இந்தியாவில் இருந்து வெளியேற்றுவது, பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவது ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இருநாடுகள் இடையேயான வர்த்தக உறவும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் தான் பாகிஸ்தானியர்கள் கதறி வருகின்றனர். மற்றபடி அணுஆயுதம் வைத்துள்ளோம். இந்தியாவை தாக்கி விடுவோம் என்பது எல்லாம் வெறும் திமிர் பேச்சு தான் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.