வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் - அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா
14 Apr,2025
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக அதிகரித்தார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை கடுமையாக அதிகரித்தார். பின்னர், அதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அவர், சீனா மீதான வரி மட்டும் நீடிக்கும் என்றார்.
சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் மூண்டதை அடுத்து, சீன பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீதம் வரி விதிப்பதாக சீனாவும் போட்டிக்கு போட்டியாக அறிவித்தன. இதனால், சீனாவில் இருந்து பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கவலையில் மூழ்கின.
இதையடுத்து, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், சீனா மீதான பரஸ்பர வரியில் 20 மின்னணு பொருட்களுக்கு விலக்கு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, செல்போன், லேப்டாப், செமிகண்டக்டர், மானிட்டர்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களுக்கு பரஸ்பர வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்கா தனது தவறுகளை சரி செய்யும் விதமாக, பரஸ்பர வரியை முழுவதுமாக ரத்து செய்து, பரஸ்பர மரியாதை என்ற பாதைக்கு திரும்ப வேண்டுமென சீனாவின் வர்த்தக அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.