லண்டனில் இருந்து மும்பை வந்து கொண்டிருந்த விர்ஜின் அட்லாண்டிக் விமானம் திடீரென துருக்கியில் தரையிறக்கப்பட்டது. சுமார் 40 மணி நேரமாக அந்த விமானம் துருக்கியிலேயே இருக்கும் சூழலில், அதில் இருந்த இந்தியர்கள் உட்பட சுமார் 250 பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இது தொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி பேசுபொருள் ஆகியுள்ளது.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்ல பெரும்பாலான சூழல்களில் விமானங்களே ஒரே சாய்ஸ்ஸாக இருக்கிறது. வேகமாகச் செல்ல முடியும்.. சவுகரியமாகப் பயணிக்கலாம் என பல காரணங்கள் இருப்பதால் விமான பயணங்களையே மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், சில நேரங்களில் விமான பயணங்கள் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது அளவுக்கு மோசமாகவும் போய்விடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
அதாவது விர்ஜின் அட்லாண்டிக் விமானத்திற்குச் சொந்தமான விமானம் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் இந்தியர்கள் உட்பட சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த விமானம் இப்போது 40 மணி நேரத்திற்கு மேல், அதாவது சுமார் 2 நாட்களாகத் துருக்கியின் தியர்பாகிர் விமான நிலையத்தில் சிக்கியுள்ளது. இதனால் விமானத்தில் உள்ள இந்தியர்கள் உட்பட பலரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்த VS358 விமானம் லண்டனில் இருந்து மும்பைக்கு வர வேண்டி இருந்தது. இருப்பினும், நடுவானில் அது திடீர் மருத்துவ எமர்ஜென்சி காரணமாகத் துருக்கியில் உள்ள தியர்பாகிர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். விமானம் துருக்கியில் தரையிறங்கிய பிறகு, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது இப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
விர்ஜின் அட்லாண்டிக் செய்தி தொடர்பாளர் மேலும் கூறுகையில், "எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு மட்டுமே நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளிப்போம். தற்போது ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தேவையான தொழில்நுட்ப ஒப்புதல்களைப் பெற்ற பிறகு, ஏப்ரல் 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு தியர்பாகிர் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும்.
மாற்று விமானம்
ஒருவேளை தேவையான ஒப்புதலைப் பெற முடியவில்லை என்றால் வேறு ஒரு விமானம் மூலம் எங்கள் பயணிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்கிடையில் பயணிகளுக்குத் துருக்கியில் தங்க ஹோட்டல் மற்றும் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பிரச்சினையை விரைவாகச் சரி செய்ய முயன்று வருகிறோம். தற்போது என்ன சூழல் என்பதையும் பயணிகளுக்குச் சொல்லியே வருகிறோம்" என்றார்.
அதேநேரம் ஏர்போர்ட்டில் சிக்கித் தவிக்கும் பயணிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் சமூக வலைத்தளங்களில் சொல்லும் தகவல்கள் வேறு விதமாகவே இருக்கிறது. அதாவது விமான நிலையத்தில் காத்திருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஒரே ஒரு கழிப்பறை இருப்பதாகப் பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், கடும் குளிர் நிலவும் சூழலில் பெட்ஷீட் கூட வழங்கப்படவில்லை என்றும் சாடியுள்ளனர்.
மேலும், அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு போட்டோகளும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அதில் பயணிகள் பலரும் ஏர்போர்ட்டில் நின்று கொண்டு இருப்பதும் ஏர்போர்ட்டிலேயே ஓரமாகப் படுத்துத் தூங்குவதும் தெரிகிறது. பலரும் தங்க ஹோட்டல் வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை என்றே புகார் தெரிவித்துள்ளனர்.