மியான்மரில் ஆபத்து இன்னும் விலகவில்லை.. உலக சுகாதார
31 Mar,2025
மியான்மரில் வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான பூகம்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை உலக சுகாதார அமைப்பு உச்சக்கட்ட எமர்ஜென்சி நிலையாக அறிவித்துள்ளது. மேலும், மருத்துவ உட்கட்டமைப்பு சரியாக இல்லாததால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மியான்மர் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து தாக்கிய நிலநடுக்கத்தால் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. 7.7 ரிக்டரில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட சூழலில், தொடர்ந்து சற்று நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் அடுத்து மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அங்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மியான்மார் நாடு முழுக்க இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மேலும், தாய்லாந்து தலைநகர் பாங்காக் வரையிலும், இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களிலும், சீனாவின் ஒரு சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்தளவுக்கு நிலநடுக்கம் மிக வலிமையாக இருந்தது. மியான்மாரில் ஏற்கனவே ராணுவ ஆட்சி அமலில் உள்ள சூழலில், அங்கு மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு மிக மோசமாக உள்ள சூழலில், உலக நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் ஏற்கனவே உதவி பொருட்களையும் மீட்புப் படையினரையும் மியான்மருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது
உச்சத்தில் உயிரிழப்புகள் மியன்மாரில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் சரிந்துள்ளன. இதுவரை சுமார் 1700 பேரின் உடல்கள் மியான்ரில் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 300 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. முதற்கட்ட சேதங்களை வைத்துப் பார்க்கும்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000ஐ தாண்டக்கூடும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடரும் நில அதிர்வுகள் பொதுவாக நிலநடுக்கம் என்பது இரண்டு டெக்டோனிக் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் ஏற்படுகிறது. மியான்மர் நிலநடுக்கம் என்பது இந்திய டெக்டோனிக் தட்டு யூரேசிய தட்டுடன் மோதியதால் ஏற்பட்டுள்ளது.. அதேநேரம் நிலநடுக்கத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள் (after shocks) பல மாதங்கள் வரை நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். தொடர்ச்சியாக அங்குச் சிறு மிதமான நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. அதன்படி திபெத்தில் இன்று காலை திபெத்தில் 4.3 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இதில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்பு மோசம் மியான்மரை பொறுத்தவரை அங்கு இப்போது ராணுவ ஆட்சியே நடந்து வருகிறது. அங்கு நிலைமை மிக மோசமாக இருக்கும் இந்தச் சூழலிலும் எதிர்ப்பு குழுவினர் மீது மியான்மர் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. பல கிராமங்களில் வான்வழித் தாக்குதலை மியான்மர் ராணுவம் நடத்தியுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது தாக்குதல் நடத்தியது சரி இல்லை என்றே பலரும் சாடி வருகிறார்கள்.
உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு மியான்மர் பூகம்பத்தை உயர்மட்ட அவசரநிலையாக அறிவித்துள்ளது. மேலும், அங்கு அடுத்த 30 நாட்களுக்கு உயிர்களைக் காப்பாற்றவும் நோய் பரவலைத் தடுக்கவும் 8 மில்லியன் டாலர்கள் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. மியான்மரில் பூகம்பத்தால் ஒரு பக்கம் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் காயமடைந்தோருக்குச் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சையும் வழங்க முடியவில்லை. இதனால் அங்குப் பல ஆயிரம் பேர் நோய்த் தொற்று ஆபத்தில் இருப்பதாகவும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.