
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு பிறகு அமைந்த இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் இருக்கிறார். இதற்கிடையே அவருக்கும் அந்நாட்டின் ராணுவ தளபதிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு ராணுவம் ஆட்சியைப் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், இதற்கு முகமது யூனுஸே விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். நமது அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு வரை ஷேக் ஹசீனா ஆட்சியே நடந்து வந்தது. இருப்பினும்,
இட ஒதுக்கீடு தொடர்பாக எங்கு ஏற்பட்ட மாணவர் போராட்டம் கையை மீறிச் சென்றது. இதனால் ஷேக் ஹசீனா வேறு வழியின்றி வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி? இதற்கிடையே வங்கதேச ராணுவத்திற்கும் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் இடைக்கால அரசைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் ராணுவமே ஆட்சியைப் பிடிக்கவுள்ளதாகக் கூட தகவல்கள் வெளியானது.
இதற்காக ராணுவ தளபதி தனியாக மீட்டிங்குகளையும் கூட நடத்துவதாகச் சொல்லப்பட்டது. இது வங்கதேசத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. முகமது யூனுஸ் மறுப்பு இதற்கிடையே ராணுவ புரட்சி மற்றும் ஆட்சி கவிழ்ப்பு குறித்துப் பரவும் தகவல்களை வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிகள் நடந்து வருவதாகவும் நாட்டின் ஸ்திரமின்மைக்குப் பிரச்சினை ஏற்படுத்தவே திட்டமிட்டு இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். Powered By இது தொடர்பாக முகமது யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்த இடைக்கால அரசு பதவியேற்றது முதலே, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கணக்கில் அடங்காத வதந்திகள் பரவி வருவது உங்களுக்கே தெரியும். நாட்டின் ஸ்திரமின்மைக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள். ஒன்றன்பின் ஒன்றாகத் தவறான தகவல்களைப் பரப்பி, அதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சி நடக்கிறது. திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்படுகிறது தங்களால் முடிந்த வரை அனைத்து புதுமையான வழிகளிலும் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.
சம்பந்தமே இல்லாத இரண்டு நிகழ்வுகளை இணைத்துப் பேசுகிறார்கள். அடுத்தடுத்து சில சம்பவங்கள் ஏற்படுத்தப்படுகிறது. வேறு எங்கோ நடந்த சம்பவங்களை வைத்து போட்டோக்களை தயாரிக்கிறார்கள். அவை இந்த நாட்டில் நடந்த சம்பவங்களைப் போலச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிப் பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள்.
தேர்தல்கள் நெருங்க நெருங்க, தவறான தகவல்களின் இன்னும் தீவிரமாக வரவே செய்யும். இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள், ஏன் இதுபோல செய்கிறார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இந்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஐநா சபையை நாங்கள் நாடியுள்ளோம். இந்த விவகாரத்தில் எங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐநா பொதுச் செயலாளர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான தகவல் முன்னதாக வங்கதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் திங்களன்று ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியதாகவும் அதில் லெப்டினன்ட் ஜெனரல்கள், மேஜர்கள், ராணுவத் தலைமையக அதிகாரிகள் உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து வங்கதேசத்தில் எமர்ஜென்சி நிலையை அறிவிக்க அல்லது முகமது யூனுஸை பதவியில் இருந்து நீக்க வங்கதேச அதிபருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இதனை ராணுவ தளபதி வேக்கரே திட்டவட்டமாக மறுத்தார். மக்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.