நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் வெனிசுலா கும்பலைச் சேர்ந்த 250 பேரை நாடு கடத்திய டிரம்ப்: அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை
18 Mar,2025
அமெரிக்க அதிபராக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு சட்டவிரோத குடியேறிகளை தீவிரமாக நாடு கடத்தி வருகிறது. அந்த வகையில், வெனிசுலாவைச் சேர்ந்த சட்டவிரோத சிறை கும்பலான டிரென் டி அராகுவாவைச் சேர்ந்த 250 பேரை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. உடனடியாக அவர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு விமானம் மூலம் எல்சால்வடார் நாட்டிற்கும், ஹண்டுரோசுக்கும் அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையே, 18ம் நூற்றாண்டு போர்க்கால சட்ட விதியை பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்த உத்தரவிட்டதை எதிர்த்து வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி போஸ்பெர்க், நாடு கடத்தல் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தார்.
ஆனால், அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் சமயத்தில் 2 விமானங்கள் வானில் புறப்பட்டு சென்று கொண்டிருப்பதாக மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் தெரிவித்தனர். இதைக் கேட்ட நீதிபதி, விமானங்கள் திரும்பி வர வேண்டுமென வாய்வழி உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில், ‘‘நீதிமன்ற உத்தரவை பின்பற்ற நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், பயங்கரவாத சட்டவிரோத குடியேறிகள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு சட்டப்பூர்வ அதிகாரமில்லை’’ என்றார். நீதிமன்றம் தடை விதித்தும் சட்டவிரோத குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் வலுக்கட்டாயமாக நாடு கடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.