விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட்டார் சுனிதா: அமெரிக்காவில் நாளை தரை இறங்குகிறார்
                  
                     18 Mar,2025
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய வம்சாவளியினரான அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் கடந்த ஜூன் 5ம் தேதி ஒருவார பயணமாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டது.
	 
	இதனால் அந்த விண்கலம் மட்டும் தனியாக பூமிக்கு திரும்பியது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டனர். இதற்கிடையே, சுனிதா, வில்மோர் மற்றும் ஏற்கனவே விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள மற்ற விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக 4 பேர் கொண்ட புதிய குழுவுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. அங்கு புதிய குழுவினரை சுனிதா உள்ளிட்ட வீரர்கள் கைகுலுக்கி விண்வெளி நிலையத்திற்கு வரவேற்றனர்.
	 
	இந்நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உட்பட 4 வீரர்கள் இன்று விண்வெளியில் இருந்து பூமிக்கு புறப்பட உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. அதன்படி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் 9 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் பூமியை நோக்கி பயணத்தை தொடங்கினர்.
	 
	சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.27 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவில் சுனிதா வில்லியம்ஸ் பூமியில் தரையிறங்குகிறார்