சீனாவுக்கு அதிகப்படியான வரியை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜி ஜின்பிங்கை கதறவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க சீனாவின் நட்பு நாடாக உள்ள ரஷ்யா பெரிய ஆப்பை வைத்துள்ளார். சீனாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதி நாடாக ரஷ்யா உள்ள நிலையில் அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் போட்ட உத்தரவு ஜி ஜின்பிங்கிற்கு பெரிய சிக்கலை கொடுத்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நாடுகளுக்கு அதிரடியாக வரிகளை விதித்து வருகிறார். அதன்படி கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு முதற்கட்டமாக டொனால்ட் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளார். அதன்படி சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவின் பொருட்களுக்கு வரி விதிக்க தொடங்கி உள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தக போர் வெடிக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவையும், அமெரிக்காவையும் எடுத்து கொண்டால் இரண்டுக்கும் இடையேயான உறவு என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை. அதேபோல் இருநாடுகளும் யார் பெரியவர்கள் என்ற அதிகார போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அமெரிக்கா, சீனாவுக்கும், சீனா அமெரிக்காவுக்கும் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்போது சத்தமே இல்லாமல் சைலன்ட்டாக சீனாவுக்கும் செக் வைத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இதற்கு அவர் டொனால்ட் டிரம்பின் யுக்தியை தான் பயன்படுத்தி உள்ளார். சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நல்ல உறவு என்பது உள்ளது. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. ஆனால் சீனா பொருளாதார தடைகளை விதிக்கவில்லை. ரஷ்யாவுக்கு பக்கபலமாக இருந்து வந்தது. மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இடையே நல்ல நட்பு உள்ளது.
இதனால் தான் அமெரிக்கா என்று வந்தால் ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து விடும். இப்படியான சூழலில் தான் சீனாவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதாவது சீனாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கார்களுக்கான ‛Recycling fees' என்பதை ரஷ்யா அதிகரித்துள்ளது. இந்த Recycling fees என்பது ஒரு காரின் லைப் முடியும்போது அதனை அப்புறப்படுத்துவதற்கு ஆகும் செலவாகும். இதுவரை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனா கார்களுக்கான ரிசைக்ளிங் கட்டணம் என்பது ஒரு காருக்கு 5,790 அமெரிக்க டாலர் என்ற
அளவில்இருந்தது. இந்திய மதிப்பில் பார்த்தால் சுமார் ரூ.5 லட்சமாக உள்ளது. இந்த ரீசைக்ளிங் கட்டணத்தை தற்போது ரூ.6.50 லட்சமாக (7,500 அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2030ம் ஆண்டு வரை 10 சதவீதம் வரை இந்த கட்டணம் என்பது உயர்த்தப்படும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இது சீனாவுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்த உள்ளது. ஒருபக்கம் எதிரியாக உள்ள அமெரிக்கா வரி விதிப்பை அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் நட்பு நாடான ரஷ்யாவும் சீனாவுக்கான கார் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கட்டண உயர்வின் பின்னணியில் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. அது என்னவென்றால் ரஷ்யாவில் ஆட்டோமொபைல் துறையில் சீனாவின் ஆதிக்கம் என்பது ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரித்து வருவது தான்.
அதாவது கடந்த 2022ம் ஆண்டில் சீனாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களை ஒப்பிடும்போது கடந்த 2024ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 7 மடங்கு வரை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு சீனாவில் இருந்து ரஷ்யாவுக்கு 11 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக சீனாவின் பயணிகள் கார் சங்கம் (China Passenger Car Association) வழங்கிய புள்ளிவிவரத்தை எடுத்து கொண்டால், ‛‛ரஷ்யா என்பது சீனாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதி சந்தையாக உள்ளது. சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களில் 30 சதவீதம் ரஷ்யாவுக்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதனால் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பிராண்டுகளின் கார்கள் கிடைக்கவில்லை. இதனால் ரஷ்யா மக்கள் சீனாவின் கார்களை வாங்கி பயன்படுத்த தொடங்கினர். இதனால் சீனாவின் கார் ஏற்றுமதியில் ரஷ்யா முக்கிய இடத்தை பிடித்தது'' என கூறப்பட்டுள்ளது. இப்படி சீனாவின் கார்கள் ரஷ்யாவை ஆக்கிரமித்து வருவதால் அந்த நாட்டின் உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு முடிவு கட்டும் வகையில் தான் ரஷ்யா, சீனாவின் கார்களுக்கு ரீசைக்கிளிங் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதுபற்றி சீனாவின் பயணிகள் கார் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி டொங்க்சு கூறுகையில், ‛‛ உக்ரைன் மீதான போரால் சர்வதேச பிராண்டுகளை சேர்ந்த கார்கள் ரஷ்யாவுக்கு கிடைக்கவில்லை. இதனை சீனா பூர்த்தி செய்தது. உக்ரைன் மீதான போர் நிற்கும் பட்சத்தில் ரஷ்யாவுக்கு பிற நாடுகளின் கார்கள் கிடைக்கும். இது சீனாவின் மார்க்கெட்டை சரிய வைக்கும் '' என்றார்.