போர் நிறுத்தம்! உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் உயிரோடு இருப்பார்கள்.. புதின் அறிவிப்பு
15 Mar,2025
அமெரிக்காவின் தலையீட்டையடுத்து உக்ரைன் போர் ஏறத்தாழ முடிவை நெருங்கியிருக்கிறது. இந்நிலையில், குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் வீரர்கள் சரணடைந்தால் அவர்கள் உயிருடன் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
முன்னதாக உக்ரைன் வீரர்களை உயிருடன் விட வேண்டும் என்று டிரம்ப் புதினிடம் வலியுறுத்தியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த போரை தொடங்கி வைத்தது அமெரிக்காதான். அதன் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய வேண்டும் என்று விரும்பியது. இதனையடுத்து, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கான முயற்சிகளை எடுத்தார். இது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை. காரணம் ரஷ்யா உக்ரைனின் பக்கத்து நாடு. அதாவது இந்தியா-பாகிஸ்தான் போல எல்லைகளை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றன. இப்படி இருக்கும்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்து, நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் நிலை நிறுத்தப்பட்டால் அது புதினுக்கு நெருக்கடியை கொடுக்கும். எனவே நேட்டோ திட்டத்தை கைவிட வேண்டும் என்று புதின் உக்ரைனை வலியுறுத்தினார். ஜெலன்ஸ்கி இதனை காது கொடுத்து கேட்கவில்லை.
இப்படி இருக்கையில்தான் கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா போரை அறிவித்தது. ஒரு சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஏதும் நடக்கவில்லை. குட்டி நாடான உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியது. எல்லாம் பைடன் அதிபராக இருந்த காலத்தில்தான். ஆனால், டிரம்ப் ஆட்சிக்கு வந்தவுடன், உக்ரைனுக்கு செய்வது தண்ட செலவு என்று கூறி இந்த ஆயுத உதவியை நிறுத்தி விட்டார். அப்புறம் என்ன? ஜெலன்ஸ்கி தானாக வழிக்கு வர, போரை நிறுத்துவதுதான் தீர்வு என்று டிரம்ப் சொல்ல ஒரு வழியாக உக்ரைன்-ரஷ்யா என இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் சண்டை இன்னும் நின்றபாடில்லை.
பிரச்சனையை தீர்க்க டிரம்ப் புதினுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார். "இப்போது சண்டை நடந்துக்கொண்டிருக்கும் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் வீரர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களை கொல்ல கூடாது. பத்திரமாக உக்ரைனிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்" என்பதுதான் அந்த கோரிக்கை. இதற்கு பதிலளித்துள்ள புதின், "உக்ரைன் படைகள்
சரணடைந்தால், அவர்கள் பாதுகாப்பாகவும், மரியாதையாகவும் நடத்தப்படுவார்கள்" என்று கூறியுள்ளார். இருந்தாலும் எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்களை எப்படி உயிருடன் திருப்பி அனுப்புவது? என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் திமித்ரி மெட்வெதேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை பற்றி நேட்டோ கூறுகையில், "ரஷ்யா எதிர்காலத்தில் எந்த நாட்டையும் கைப்பற்ற முடியாத அளவுக்கு பாதுகாப்பை நாம் பலப்படுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.