அமெரிக்காவில் வசிப்பவர்கள் கிரீன் கார்டு வைத்திருந்தாலும் நிரந்தர குடியுரிமை கிடையாது: கருத்தால் பரபரப்பு
15 Mar,2025
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர் மஹ்மூத் கலீல் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டதால், மாணவர் மஹ்மூத் கலீலின் கிரீன்கார்டை திரும்ப பெற அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த மார்ச் 8ம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவரை நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதை கண்டித்து அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் கிரீன்கார்டு வைத்திருப்பதால் அவரை நாடு கடத்தக்கூடாது என்றும் ஒரு தரப்பினர் கூறிவருகிறார்கள். இதுபற்றி துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில்,’ கிரீன் கார்டுகள் அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கு உத்தரவாதம் அளிக்காது. அவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்கான உரிமைக்கு கிரீன் கார்டு உத்தரவாதம் அளிக்காது.
இது அடிப்படையில் பேச்சு சுதந்திரம் பற்றியது அல்ல. இது தேசிய பாதுகாப்பு பற்றியது. அமெரிக்க பொதுமக்களாகிய நாம் நமது தேசிய சமூகத்தில் யார் சேர வேண்டும் என்பதும் மிக முக்கியமானது. இந்த நபர் அமெரிக்காவில் இருக்கக்கூடாது என்று அதிபர் முடிவு செய்தால், அவர்களுக்கு இங்கு தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. அது அவ்வளவு எளிது’ என்றார். அவரது கருத்து கிரீன்கார்டு வாங்கி லட்சக்கணக்கில் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கும் ஆபத்தாக முடியலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.