கனடாவின் புதிய பிரதமரானார் மார்க் கார்னி.. யார் இவர் தெரியுமா?
15 Mar,2025
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றார். கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த நிலையில் இவர் இன்று பொறுப்பேற்றார். கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி யார்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு: கனடாவில் லிபரல் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இதன் தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமராக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கனடா பிரதமர் பொறுப்பை வகித்து வந்தார்.
அதாவது 2015 நவம்பர் 4ம் தேதி அவர் தொடர்ந்து பிரதமராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. ஜஸ்டின் ட்ரூடோ நாட்டின் பொருளாதார நிலையை கவனத்தில் கொள்ளாமல் சுயவிளம்பரத்துக்கான செயலில் ஈடுபட்டு வருவதாக அவரது கட்சியினரே குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதுமட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா உள்பட பல உலக நாடுகளிடம் அவர் மோதல் போக்கை கடைப்பிடிக்க தொடங்கினர்.
இதனால் தினம் தினம் அவருக்கு எதிரான செய்திகள் வெளியாகின. விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதத்தில் அங்கு தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்தார். அதன்படி அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து முறைப்படி கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி இன்று பதவியேற்று கொண்டார். இவர் யார் என்றால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தவர். பேங்க் ஆஃப் கனடா மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகிய வங்கிகளில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக கடந்த 2008 ல் கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அப்போது பேங்க் ஆஃப் கனடாவின் ஆளுநராக பொறுப்பெற்று நிலையை சரிசெய்தார்.
இவர் பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும், முதலீடு திட்டங்களை வகுப்பதிலும் வல்லவர். கனடா நிதி சிக்கலில் சிக்கியிருக்கும் நிலையில் மார்க் கார்னி மீது நம்பிக்கை வைத்து லிபரல் கட்சி அவரை பிரதமராக தேர்வு செய்துள்ளது. இவருக்கு இப்போது 60 வயது ஆகிறது. கனடாவின் புதிய பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக லிபரல் கட்சி உறுப்பினர்கள் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர். அதில் 86 சதவீத ஓட்டுகளை பெற்று முன்னிலை பெற்ற
தற்போது அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு என்பது உள்ளது. இருநாடுகளும் அண்டை நாடுகளாக உள்ளன. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவை, அமெரிக்காவின் 51 வது மகாணமாக சேர்க்க நினைக்கிறார். அதுமட்டுமின்றி கனடாவுக்கு அதிகப்படியான வரிகளை விதித்து வருகிறார். கனடா ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கி உள்ளது. இதற்கிடையே டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு கனடாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த சவால்களுக்கு நடுவே தான் மார்க் கார்னி கனடாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். விரைவில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மார்க் கார்னி விரைவில் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி விதிப்பு பிரச்சனைக்கு முடிவு கட்டலாம் என்று கூறப்படுகிறது.