ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க ஆர்வம் காட்டும் சூழலில் ‛‛உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டோம்'' என்று அந்த நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இதனால் ஈரானுக்கும்,
அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் இன்னும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏனென்றால் ஈரானுக்கும், டிரம்புக்கும் தனிப்பட்ட பஞ்சாயத்துகள் பல உள்ளன. டொனால்ட் டிரம்பை ஈரான் கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை கொல்ல முயன்றதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக குற்றச்சாட்டு என்பது உள்ளது. இப்படியான சூழலில் தான் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில்,
‛‛என்னை ஈரான் படுகொலை செய்ய முயன்றால் அந்த நாடு இருக்காது. மொத்தமாக ஈரான் அழிக்கப்படும். அந்த நாட்டில் ஒன்றுமே இல்லாத அளவுக்கு அழிக்கப்படும். இந்த நடவடிக்கை தொடர்பாக ஆலோசகர்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளேன்'' என்று வார்னிங் செய்தார்.
மேலும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் தற்போது பிரச்சனை உள்ளது. அதேவேளையில் அமெரிக்கா, இஸ்ரேல் நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தல் என்பது உள்ளது. இதற்கிடையே தான் ஈரான் தொடர்ந்து தனது படையின் வலிமையை காட்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. இதுதவிர அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இப்படியான சூழலில் தான் அணு ஆயுத திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து டொனால்ட் டிரம்ப் சார்பில் ஈரானுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கடிதம் என்பது ஈரானின் உயர்மட்ட தலைவர் காமேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ‛‛அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் இணையவில்லை என்றால் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை அமெரிக்கா தடுக்கும்'' என்று வார்னிங் செய்துள்ளார்
இந்நிலையில் தான் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கோரிக்கையை புறம்தள்ளி உள்ளார். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்ப்புக்கு கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறுகையில், ‛‛அமெரிக்கா உத்தரவுகளை பிறப்பித்து அதன் வழியாக எங்களை மிரட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு போகமாட்டேன். அமெரிக்கா விரும்பியதை செய்யட்டும்''
என்று பதிலடி கொடுத்துள்ளார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. இதனால் வரும் நாட்களில் ஈரானுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யலாம் டிரம்பும், ஈரான் தலைவர்களும் எலியும், பூனையுமாக உள்ளனர். தற்போது ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான பணியை டிரம்ப் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. அதன்படி ஈரானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை டிரம்ப் கையில் எடுக்கலாம். Advertisement ஏனென்றால் இப்போது மக்களின் பாதுகாப்பு கருதி எந்த நாடுகளும் அணு ஆயுதம் தயாரிக்க அனுமதி என்பது இல்லை. தற்போது உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதம் என்பது உள்ளது. மற்ற நாடுகளிடம் அணு ஆயுதம் என்பது இல்லை. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதுதான் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் (Nuclear Non - Proliferation Treaty). இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் என்பது 1968 ம் ஆண்டில் வரையறுக்கப்பட்டது. 1970 ம்
ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படும் பதினெட்டு நாடுகளின் ஆயுதக் குறைப்புக் குழுவால் இந்த ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் நோக்கம் என்பது உலக நாடுகளை அணு ஆயுத மிரட்டலில் இருந்து பாதுகாப்பது தான். அணு ஆயுதங்கள் அதிகரிப்பதை தடுப்பது, அணு ஆயுத சோதனைகளை தடுப்பது உள்ளிட்டவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 190 நாடுகள் கையெழுத்திட்டன. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் முன்பே அமெரிக்கா,
ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை தயாரித்துவிட்டன. இதனால் அந்த 5 நாடுகளும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதில் இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதேவேளையில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகும் கூட இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இல்லை. அப்படியென்றால் இப்போது எப்படி அணுஆயுதம் இருக்கிறது என்ற கேள்வி எழலாம். இதற்கு இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் தனித்தனித்தனியாக சோதனைகளை மேற்கொண்டு அணு ஆயுதங்களை தயாரித்தன. அதேபோல் இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த்தில் வடகொரியா கையெழுத்திட்டு இருந்தாலும் கூட அமெரிக்காவுடனான மோதலால் அணு ஆயுதங்களை
அந்த நாடு உற்பத்தி செய்தது. அதன்பிறகு அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வடகொரியா விலகியது. இதனால் தான் உலகில் இந்த 9 நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதம் என்பது உள்ளது. மற்ற நாடுகளில் அணு ஆயுதம் இல்லை. ஆனாலும் இஸ்ரேல் உடனான அதிகரித்து வரும் மோதலால் ஈரான் தற்போது அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது. ஈரானை பொறுத்தமட்டில் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படியான சூழலில் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும்போது தனிமைப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.