இஸ்ரேல் - காசா போர் பிரச்சனைக்கு நடுவே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலை புறக்கணித்து நேரடியாக ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஹமாஸ் மற்றும் அமெரிக்கா உறுதி செய்துள்ளது. அதேவேளையில் இஸ்ரேல் தரப்போ எங்களுக்கு தெரியாமல் அமெரிக்கா இந்த பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் முதுகில் குத்துகிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. பாலஸ்தீனமும், இஸ்ரேலும் அண்டை நாடுகளாக உள்ளன.
தற்போது காசா எனும் பகுதி பாலஸ்தீனத்துக்கு சொந்தமானதாக உள்ளது. இந்த காசா ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1000க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 200க்கும் அதிகமானவர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போர் தொடங்கியது. 15 மாதமாக போர் புரிந்தது. இந்த போர் தற்போது 90 நாட்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டது. காசாவில் இருந்து பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதேபோல் இஸ்ரேலில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தம் ஜனவரியில் அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்தம் 90 நாட்கள் தான். இதனால் விரைவில் போர் நிறுத்தம் என்பது முடிவுக்கு வர உள்ளது. 2ம் கட்ட போர் நிறுத்தம் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது இஸ்ரேலை புறக்கணித்து ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. மார்ச் 5ம் தேதி கூட அமெரிக்கா நேரடியாக ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. எகிப்து மூலமாக இந்த பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை என்பது பாசிட்டிவ்வாகவே முடிவடைந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது இஸ்ரேல் - காசா இடையேயான 2வது போர் நிறுத்தம் உள்பட பிற அம்சங்கள் பற்றி விவாதிக்க்பபட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் ஒரு முக்கிய தகவலை தெரவித்தனர். அதாவது ‛‛அமெரிக்கா நேரடியாக எங்களிடம் பேசி உள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல் இரட்டை குடியுரிமை பெற்றவர்களை விடுவிப்பது தொடர்பாக பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை என்பது கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இது நேரத்தையும், தடைகளையும் குறைக்கிறது. இந்த பேச்சுவார்த்தை என்பது மிகவும் எளிதாக அமையவில்லை. இருப்பினும் இது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது'' என்று கூறியுள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி வரை ஜோ பைடன் அதிபராக இருந்தார். அதன்பிறகு ஜனவரி 20ம் தேதி முதல் டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தார். இருப்பினும் யாருடைய காலத்தில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கியது என்பதை ஹமாஸ் அமைப்பினர் கூறவில்லை. ஆனாலும் கூட தற்போது வரை ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா பேசி வருவதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் டொனால்ட் டிரம்ப் தரப்பு இப்போது ஹமாஸ் அமைப்புடன் பேசி வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
மேலும் ஹமாசுடன் நேரடியாக பேசியதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தி பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில், ‛‛பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் ஆடம் போஹ்லர், ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். போஹ்லருக்கு யாருடன் வேண்டுமானாலும் பேச அதிகாரம் உள்ளது. இந்த பேச்சுவார்த்தை பற்றிய விபரம் இஸ்ரேலுக்கு தெரியும்'' என்று கூறினார். தற்போது வரை காசாவில் 59 பணையக்கைதிகள் உள்ளனர். இதில் 5 பேர் அமெரிக்க குடியுரிமை கொண்டவர். இதில் ஒருவர் மட்டுமே உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படியான சூழலில் தான் அமெரிக்கா நேரடியாக ஹமாசுடன்
பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. Advertisement ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா கடந்த 1997 ம் ஆண்டில் அறிவித்தது. தற்போது வரை ஹமாஸை பயங்கரவாதிகள் பட்டியலியே அமெரிக்கா வைத்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை பயங்கரவாத பட்டியலில் இருக்கும் குழுவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை என்பது நடத்தப்படுவது இல்லை. இதுதான் அமெரிக்காவின் கொள்கையாக உள்ளது. ஆனால் அந்த கொள்கையை மீறி முதல் முறையாக அமெரிக்கா, ஹமாஸ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அதுவும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் போர் புரிந்த இஸ்ரேலை புறக்கணித்து அமெரிக்கா நேரடியாக அந்த அமைப்பினரிடம் பேசி உள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் அதிருப்தியடைந்துள்ளார். இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அதிகாரிகள் தரப்பில், ‛‛ஹமாஸ் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா பேசுவது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் அனுப்பி வைக்கப்படவில்லை. ஊடகங்கள் மூலம் தான் அமெரிக்கா - ஹமாசுடன் நேரடியாக பேசுகிறது என்பது எங்களுக்கு தெரியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா சார்பில், ஹமாஸ் அமைப்புடன் நாங்கள் பேசுவது இஸ்ரேலிடம் தெரிவித்து உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் தரப்போ எங்களிடம் அமெரிக்கா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே புதிய பஞ்சாயத்து தொடங்கி உள்ளது. மேலும் காசாவை கைப்பற்றுவதில் அமெரிக்கா மிகவும் உறுதியாக உள்ளது. இதனை டொனால்ட் டிரம்பே வெளிப்படையாக அறிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது போர் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பிறகு பத்திரிகையாளர்களை டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அந்த சமயத்தில் டொனால்ட் டிரம்ப், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். காசா அழிவின் விளிம்பில் உள்ளது. இஸ்ரேல் போரால் காசா மக்களை அங்கு வசிக்க சொல்வது மீண்டும் மீண்டும் மோதலுக்கு வழிவகுக்கும். இதனால் அமெரிக்கா காசாவை கைப்பற்றி மேம்படுத்த உள்ளது. காசா மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்களை எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்''
என்றார். இதற்கு எகிப்து, ஜோர்டான் உள்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காசா மக்களை வெளியேற்றாமல் அமெரிக்கா மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று அந்த நாடுகளின் தலைவர்கள் கூறினர். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதனை ஏற்கவில்லை. காசாவை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளார். இதனை இஸ்ரேல் வரவேற்றது. மேலும் இதனை இஸ்ரேல் மூலமாக தான் அமெரிக்கா செய்யும் என்று கூறப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நேரடியாக இஸ்ரேலை புறக்கணித்து ஹமாஸ் அமைப்புடன் பேசி வருவது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது. தற்போது ஹமாசுடன் அமெரிக்கா குடியுரிமை பெற்ற பணயக்கைதிகளை மீட்பது பற்றி மட்டுமே அந்த நாட்டு தூதர் பேசினாரா? இல்லாவிட்டால் வேறு சில அம்சங்கள்பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது. அதேவேளையில் காசாவை கைப்பற்றும் விஷயத்தில் இஸ்ரேலையும் அமெரிக்க கழற்றி விடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இஸ்ரேல், அமெரிக்கா பொறுத்தவரை இரண்டும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். இப்படியான சூழலில் அமெரிக்காவின் இந்த செயல்பாடு என்பது காசா விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.