இஸ்ரேல் போரால் காசாவில் இருந்து பொதுமக்களை வெளியேற்றி அந்த நகரை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் எகிப்தில் நடந்த அரபு நாடுகளின் தலைவர்களின் அவசர மீட்டிங்கில் டிரம்பின் இந்த அறிவிப்பு ஏற்கப்படவில்லை. மாறாக காசா மக்களை வெளியேற்றாமல் ரூ.4.61 லட்சம் கோடி செலவில் 6 ஆண்டுகளில் காசாவை கட்டமைக்க அரபு நாட்டு தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இது டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா,
இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாட்டு தலைவர்களின் பிளான் என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். கடந்த 15 மாதங்களாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேலின் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போர் என்பது தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இது காசா மக்களுக்கு ஓரளவு ஆறுதலான விஷயமாகும். இதற்கிடையே தான் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார்.அப்போது காசா போர் பற்றி இருவரும் விவாதித்தனர். அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் கூறிய செய்தி தான் காசா மக்கள் மற்றும் இஸ்லாமிய நாடுகளை அதிர வைத்தது. அதாவது காசா என்பது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இப்படியான சூழலில் தான் காசாவை அமெரிக்கா கைப்பற்றும். அங்குள்ள மக்கள் அனைவரும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்ல வேண்டும் என்று கூறினார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப்,
‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். இஸ்ரேல் உடனான போரால் காசா அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால் காசா மக்களை அங்கு வசிக்க சொல்வது மீண்டும் மீண்டும் மோதலுக்கு வழிவகுக்கும். இதனால் அமெரிக்கா காசாவை கைப்பற்றி மேம்படுத்த உள்ளது.கட்டட கழிவுகள் அகற்றப்பட்டு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதன்பிறகு அனைத்து மக்களும் அங்கு வாழலாம். இந்த பணிக்காக காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும். அவர்களை பிற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். அதன்பிறகு டிரம்ப் அளித்த இன்னொரு பேட்டியில்,
‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றி மறுகட்டமைப்பு செய்யும். அதன்பிறகு காசா மக்களுக்கு அங்கு இடமில்லை'' என்று கூறினார். அதுமட்டுமின்றி காசாவில் இருந்து வெளியேறும் மக்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள் ஏற்க வேண்டும் என்று கூறினார். இதற்கு எகிப்து, ஜோர்டான் நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்னள. வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்த ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா நேரடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார். காசா மக்களை வெளியேற்றாமல் அமெரிக்கா வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று
கூறினார். ஆனால் டொனால்ட் டிரம்ப் அதனை ஏற்கவில்லை. டொனால்ட் டிரம்ப்பை பொறுத்தவரை காசாவை கைப்பற்றுவதில் மிகவும் உறுதியாக உள்ளார். இதனை இஸ்ரேலும் வரவேற்றுள்ளது. ஆனால் இஸ்லாமிய நாடுகள் டொனால்ட் டிரம்பின் முடிவுக்கு உடன்படவில்லை. டிரம்பின் முடிவு என்பது காசா மக்களுக்கு எதிரானதாக அமையும். அதோடு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் இஸ்லாமிய நாடுகள், அரபு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒன்றாக இணைந்துள்ளனர். அதாவது எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களின் அவசர மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி தான் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த மாநாடு நேற்று நடந்தது. இதில் பல்வேறு அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி கூறுகையில், ‛‛காசா மக்களின் மறுவாழ்வுக்கு உதவி செய்ய வேண்டும். காசாவை மறுகட்டமைப்பு செய்ய திட்டம் வகுக்க வேண்டும்'' என்று கூறினார். இதற்கான திட்டத்தையும் அவர் முன்னெமாழித்தார். இதனை அனைத்து அரபு நாடுகளின் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். மொத்தம் 53 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 4.61 லட்சம் கோடி) செலவில் காசா மக்களை வெளியேற்றாமல் கட்டிட கழிவுகளை அகற்றி வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் புதிய விமான நிலையம், மீன்பிடி துறைமுகம், வணிக துறைமுகம் அமைத்தல் உள்ளிட்ட அம்சங்களும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்காக உலக நாடுகளிடம் உதவி கேட்க எகிப்து சார்பில் கூட்டம் நடத்தவும், உலக வங்கியிடம் கடன் கோரவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிடமும் உதவி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி பாலஸ்தீன் நாட்டின் அதிபர் முகமது அப்பாஸ் கூறுகையில், ‛‛எகிப்து நாட்டின் இந்த திட்டம் நன்றாக உள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொள்ள வேண்டும். காசா மக்களை வெளியேற்றாமல் அந்த நகரை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும். தேவையென்றால் பாலஸ்தீனத்துக்கு அதிபர் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான சூழல் உருவாக உதவி செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்
எகிப்து மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களின் இந்த முடிவு என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் இஸ்ரேலுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த முடிவுக்கு இஸ்ரேல் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாறாக காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகளின் இந்த முடிவுக்கு டொனால்ட் டிரம்ப் தரப்பில் எந்த ரியாக்சனும் வரவில்லை. விரைவிலேயே அவர் நிச்சயம் கருத்து தெரிவிப்பார். டொனால்ட் டிரம்பை பொறுத்தவரை
காசாவில் இருந்து மக்களை வெளியேற்றுவதில் உறுதியாக உள்ளார். இதனால் அவரது கருத்து என்பது இஸ்லாமிய நாடுகளின் இந்த முடிவுக்கு எதிரானதாக தான் இருக்கும். டொனால்ட் டிரம்ப் ஒருபோதும் காச தொடர்பான முடிவில் இருந்து பின்வாங்கமாட்டார் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள். இதனால் காசா விவகாரத்தில் அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் என்பது வெடிக்கவும் வாய்ப்புள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.