சோவியத் காலத்தில் வீரியமாக செயல்பட்டு வந்த கேஜிபி எனும் உளவு அமைப்பில் டிரம்ப் சேர்க்கப்பட்டிருந்தார் என்றும், இன்றும் அவரது ஃபைல் ஆக்டிவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலமாக ரஷ்யாவுடன் டிரம்ப் ஓவராக நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நெருக்கம் அமெரிக்க மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இப்படி இருக்கையில், டிரம்ப் ஒரு உளவாளி என்று வெளியாகியுள்ள தகவல்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
KGB என்பது உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த உளவு அமைப்பாக இருந்தது. சோவியத் யூனியன் உடைந்த பின்னர் இதுவும் கலைக்கப்பட்டது. இந்த அமைப்பில் 6வது இயக்குநரகத்தில் பணியாற்றிய, முன்னாள் கஜகஸ்தான் உளவுத்துறைத் தலைவரான அல்னூர் முசாயே, டிரம்ப் குறித்து கூறியுள்ள தகவல்கள் விவாதங்களை கிளப்பியுள்ளன. "கடந்த 1987ம் ஆண்டு டிரம்ப் சோவியத் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அப்போது KGB-ல் அவர் சேர்க்கப்பட்டார். டிரம்ப்புக்கு 'க்ராஸ்னோவ்' என்று ரகசிய பெயரும் கூட வைக்கப்பட்டது. பொதுவாக சாதாரண நபர்களைதான் உளவு வேலைக்கு சோவியத் ரஷ்யா பயன்படுத்தி வந்தது.
ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை மாற்ற தொடங்கியது. அதன்படி அமெரிக்க தொழிலதிபர்கள் குறி வைக்கப்பட்டனர். அப்படித்தான் டிரம்ப்பும் சிக்கினார். மேற்பார்வையாக பார்த்தால் டிரம்ப்பின் பயணம் ரியல் எஸ்டேட் தொடர்புடையதாகத்தான் தெரியும். ஆனால், அதில் பல அரசியல் நடவடிக்கைகள் இருந்தன. தொழிலதிபர்களை உளவாளிகளாக மாற்றுவதன் மூலம் ரகசிய தகவல்கள் எளிதாக கிடைத்தது. மட்டுமல்லாது, தொழிலதிபர்கள் மேல் யாருக்கும் பெரியதாக சந்தேகமும் வரவில்லை. இன்றும் கூட டிரம்பின் ஃபைல் ஆக்டிவாக இருக்கிறது" அல்னூர் முசாயே கூறியிருக்கிறார்.
இவர் மட்டுமல்ல, கடந்த 2017ம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக இருந்த அந்தோனி ஸ்காரமுச்சி (Anthony Scaramucci) என்பவரும் டிரம்ப் குறித்து சந்தேகம் தெரிவித்திருக்கிறார். "புதின் தொடர்பான விஷயங்களில் ஏன் டிரம்ப் மென்மையாக நடந்துக்கொள்கிறார் என தெரியவில்லை" என்று அந்தோனி கூறியிருக்கிறார். சாதாரண மக்கள் டிரம்ப் நடவடிக்கையில் சந்தேகம் எழுப்புவது இயல்புதான், ஆனால், வெள்ளை மாளிகையின் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவரே இப்படி வெளிப்படையாக சந்தேகம் எழுப்பியிருப்பது, KGB முன்னாள் உளவுத்துறை தலைவர் அல்னூர் முசாயேயின் கருத்தை கவனம் பெற செய்திருக்கிறது. இருப்பினும் டிரம்ப் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்திருக்கிறார். இதுபோன்ற தகவல்கள் அபத்தமானது, போலியானது, எனக்கும் ரஷ்ய உளவுத்துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்ப் மீதான் இந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அவரது சமீபத்திய செயல்கள் இருந்தன. குறிப்பாக, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிராக ஓட்டு போட்டது, ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசி வருவது போன்றவை டிரம்ப் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஐநா வரலாற்றில், இதுவரை 4 முறைதான் ஒரே தீர்மானத்திற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் சேர்ந்து வாக்களித்துள்ளன. 1. 2001 - 9/11 தாக்குதல் குறித்து, தீவிரவாதத்திற்கு எதிரான தீர்மானம் 2. 2017 -
வடகொரிய அணுகுண்டு சோதனைக்கு எதிராக பொருளாதார தடைகளுக்கான தீர்மானம் 3. 2021 - கொரோனா தடுப்பூசி தொடர்பான தீர்மானம் 4. 2025 - உக்ரைன் போருக்கு எதிரான தீர்மானம் முதல் மூன்று தீர்மானங்கள் அவ்வளவு ஒன்றும் முக்கியமானது கிடையாது. ஆனால் 4வது தீர்மானம் மிக முக்கியமானது. உக்ரைனுக்கு அமெரிக்கா அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது உக்ரைன் கொண்டுவரும் தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளித்திருக்க வேண்டும். ஆனால், ரஷ்யாவுடன் சேர்ந்துக்கொண்டு எதிராக ஓட்டு போட்டிருக்கிறது. இது எல்லாம்தான் டிரம்ப் மீதான கேள்வியை அதிகரித்திருக்கின்றன.