ஜெலன்ஸ்கி அணிந்து வந்த ஆடையால் கடுப்பான அமெரிக்கா... டிரம்பின் உச்சபட்ச கோபத்திற்கு காரணமான அந்த உடை என்ன?
03 Mar,2025
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை போர், ஜெலன்ஸ்கி அணிந்திருந்த ராணுவ உடையால் ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை போர் ஏற்பட்ட நிலையில், அதற்கு ஜெலன்ஸ்கி அணிந்திருந்த ராணுவ உடையே முக்கிய காரணம் என குற்றம்சாட்டியது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே முற்றிய வார்த்தை போர், அவ்விரு நாடுகளின் நட்பு நிலைப்பாட்டை அசைத்து பார்த்துள்ளது. இந்த அனல் பறந்த வாக்குவாதத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அணிந்திருந்த ஆடைதான் தூபம் போட்டதாக கூறினால் நம்ப முடிகிறதா. ஆம் அப்படிதான் ட்ரம்பின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அண்டை நாடுகளான ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையில், அப்போதில் இருந்து அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி சூட் ஆடைகள் அணிவதை தவிர்த்து வருகிறார். உலக நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்திப்பதாக இருந்தாலும் சரி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாக இருந்தாலும் சரி தனது நாட்டு சின்னத்துடன் கூடிய ராணுவ ஆடையையே அணிந்து வருகிறார். நாட்டுக்காக போரில் நின்று போராடும் ராணுவ வீரர்களுடன் துணை நிற்பதை கூறும் வகையில் இந்த உடை அணிவதாக ஜெலன்ஸ்கி இதற்கு முன்பு பல்வேறு தருணங்களில் கூறியுள்ளார்.