போரால் சின்னாபின்னமான காசாவை மேம்படுத்த டிரம்ப் திட்டம் புலம்பெயர சொன்ன கருத்துக்கு ஹமாஸ் கடும் கண்டனம்
                  
                     27 Feb,2025
                  
                  
                     
					  
                     
						
	 
	 அமெரிக்காவில் குடியேற விரும்புவோருக்கு ரூ.43 கோடிக்கு தங்க அட்டை விற்கப்போவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் நாட்டை விட்டு அவர் வெளியேறுவாரா என்று காசா மக்கள் ஆவேசத்துடன் கேள்வி உள்ளனர். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து காசா போர் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தாக்குதலில் சின்னாபின்னமான காசாவை அமெரிக்கா தன் வசம் எடுத்து மேம்படுத்த திட்டம் வைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
	 
	 
	இந்த பணியை மேற்கொள்ள காசா மக்கள் அண்டை நாடுகளுக்கு தற்காலிகமாக புலம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கு ஹமாஸும், அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காசாவை அமெரிக்கா கைப்பற்றிய பிறகு வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டால் அந்த நகரம் எப்படி மாறும் என்பதை விளக்கும் காணொளியை தமது டீவீட் சமூக வலைதளபக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள அதில் போரால் சீரழிந்த காசா கொஞ்சம் கொஞ்சமாக மறுசீரமைக்கப்படுவதாக காட்டப்படுகிறது.
	 
	 
	வானுயர்ந்த மாளிகைகள் செல்வம் கொழிக்கும் வாழ்க்கை சூழலை உணர்த்தும் பண மழை விழும் கடற்கரை நடன பெண்ணுடன் ஆடும் டிரம்ப் அவரது உயரமான சிலை, பீட்சா உண்ணும் எலான் மஸ்க், கடற்கரையில் படுத்தபடி ட்ரம்புடன் அளவளாகும் நெதன்யாகு என காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காணொளியை செல்பேசியில் பார்க்கும் காசா மக்கள் தங்கள் மண்ணிலிருந்து எதற்காக தாங்கள் வெளியேற வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். காசா அதன் மக்கள் இருந்தால் தான் அழகாக இருக்கும் என்றும் மூதாதையர் வாழ்ந்த நிலத்தைவிட்டு போக போவதில்லை என்றும் கூறிய காசா மக்கள் உண்மையிலேயே உதவி செய்ய நினைப்பவர்களை வரவேற்பதாக தெரிவித்தனர்.
	 
	 
	இதனிடையே அமெரிக்க குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கு ரூ.43 கோடி விலையில் தங்க அட்டை தரப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்த முதலீட்டாளர்கள் ஏராளமான வரி செலுத்துவதுடன் வேலை வாய்ப்பை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். குடியுரிமை பெற வழிகாட்டியாக அமையும் இந்த தங்க அட்டைகள் விற்பனையை 10 லட்சம் 1 கோடி என அதிகரித்து கொண்டே போனால் பில்லியன், ட்ரில்லியன் அளவில் அமெரிக்காவில் பணம் குவியும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்