இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதேபோன்று அடுத்து ஏதாவது தவறு நடந்தால், இஸ்ரேலை நாங்கள் கைப்பற்றுவோம் என எகிப்து எம்பி முஸ்தபா பக்ரி (Mostafa Bakry) எச்சரித்துள்ளார். போர் விஷயத்தில் தற்போது வரை எகிப்து தலையிடவில்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அது உலகப்போராக மாறியிருக்கும். இந்நிலையில், இஸ்ரேலுக்கு எகிப்து வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 1920-1947 வரை பாலஸ்தீனத்தை பிரட்டன்தான் ஆட்சி செய்து வந்தது. இங்கு அரபு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் பரவலாக இருந்தனர். ஒரு கட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு என தனி நிலம் வேண்டும் என்று பிரிவினை கோரினர். அமெரிக்காவுக்கும், பிரிட்டனுக்கும் இந்த கோரிக்கையின் பின்னால் ஒரு திட்டம் இருந்தது. எனவே, யூதர்களுக்கு ஆதரவளித்தது. ஐநாவும் 1947ல் ஒரு ஆணையை கொண்டுவந்தது. ஐநாவின் 181வது விதிப்படி பாலஸ்தீனம் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பாதி யூதர்களுக்கான நாடாக இஸ்ரேல் உருவாக்கப்படும். மறுபாதி பாலஸ்தீனமாக இருக்கும் என்று கூறியது.
இதனை இஸ்ரேலும், அமெரிக்காவும், பிரிட்டனும் ஆரவாரமாக வரவேற்றன. ஆனால் எகிப்து, ஜோர்டன், ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்தனர். விளைவு போர் தொடங்கியது. இஸ்ரேல்-அரபு போர் 1948ல் வெடித்தது. ஒரு பக்கம் மிகவும் பலம் வாய்ந்த இஸ்ரேல்+அமெரிக்கா+பிரிட்டன் கூட்டணி. இன்னொரு பக்கம் வளர்ந்து வரும் நாடுகளான எகிப்து+ஜோர்டன் உள்ளிட்ட அரபு நாடுகள்.
போரின் முடிவில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. விளைவு மொத்த பாலஸ்தீனத்தில் 79% நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. ஆனால் மிக முக்கிய நகரமான வெஸ்ட் பேங்க், கிழக்கு ஜெருசேலம் ஜோர்டன் வசமும், காசா எகிப்து வசமும் வந்தது. என்னதான் 79% நிலத்தை வைத்திருந்தாலும் அது வெறும் நிலம். ஆனால் ஜோர்டனும், எகிப்தும் கைப்பற்றியது மக்கள் வாழும் முக்கிய பகுதி. எனவே, இஸ்ரேலுக்கு இது மானப்பிரச்சனையாக இருந்தது. இதனையடுத்து 1967ல் இஸ்ரேல் போரை தொடங்கியது. 6 நாட்கள் போர் நீடித்தது.
இதில் ஜோர்டன், எகிப்து வசம் இருந்த பகுதிகளை அமெரிக்கா உதவியால் கைப்பற்றியது. அப்போது முதல் இஸ்ரேல் சொல்வதுதான் பாலஸ்தீனத்தில் சட்டம். எதிர்த்து பேசினால் சிறை. கூட்டமாக சேர்ந்து போராடினால் தண்ணீர், உணவு, மின்சாரம் கிடைக்காது. எனவே இந்த சூழலை மாற்ற பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாகின. அதுதான் ஹமாஸ். அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் ஹமாஸ் தன்னை தயார்படுத்திக்கொண்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியது. பதிலுக்கு இஸ்ரேல் போரை நடத்தியது
இந்த போரில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்களை விட, பொதுமக்களே அதிகம் கொன்று குவிக்கப்பட்டனர். 42,000க்கும் அதிகமான மக்கள் கொலை செய்யப்பட்டனர். யார் சொல்லியும் இஸ்ரேல் போரை நிறுத்தவில்லை. கடைசியில் சீனா, ரஷ்யாவின் தலையீட்டால் போர் முடிவுக்கு வந்தது. இப்போது இரு பக்கத்திலும் கைதிகளின் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. ஆனால் இஸ்ரேலின் கோவம் இன்னும் குறையவில்லை. ஹமாஸ் அழிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கூறி வருகிறது. சூழல் இப்படி இருக்கையில்,
எகிப்து எம்பி முஸ்தஃபா இஸ்ரேலுக்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இஸ்ரேல் சிறிய தவறு செய்தால் கூட, அடுத்த நொடியே டெல் அவிவ்வை நாங்கள் கைப்பற்றிவிடுவோம் என்று கூறியுள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவானதாக இப்படி சொல்லவில்லை. எகிப்தை இஸ்ரேல் தாக்க நினைத்தால் பதிலடி இவ்வாறு இருக்கும் என்று கூறியிருப்பதாக ரஷ்ய ஊடகம் RT தெரிவித்திருக்கிறது.