பாலினம் மாறவும், காமிக் புத்தகம் எழுதவும் தன்பாலினத்தவர்களான எல்ஜிபிடி சமூகத்தினருக்கு அமெரிக்க மக்களின் வரிப் பணம் வாரி இறைக்கப்படுவதால் வெளிநாட்டு நிதி உதவியை அதிபர் டிரம்ப் நிறுத்த உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபராக டெனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமான ஒன்று, வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் மனிதாபிமான நிதி உதவி நிறுத்தம்.
யுஎஸ்எய்டு எனும் அரசின் தன்னார்வ அமைப்பு, உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கல்வி, சுகாதாரம், எய்ட்ஸ் பரவல் தடுப்பு, பட்டினி சாவு தடுப்பு, கர்ப்பிணி பெண்கள், பெண் குழந்தைகள் கல்வி, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குதல் என பல நல்ல காரியங்களுக்கு மனிதாபிமான நோக்கத்தோடு ஆண்டுதோறும் நிதி உதவி வழங்கி வந்தது. தற்போது இந்த நிதியை முற்றிலும் நிறுத்தி யுஎஸ்எய்டு அமைப்பை 90 நாட்களுக்கு முடக்கி உள்ளார் அதிபர் டிரம்ப். இந்த அமைப்பு வழங்கும் நிதி குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகு முடிவெடுக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் செலவினங்களை குறைக்க டிரம்பால் நியமிக்கப்பட்ட தொழிலதிபர் எலான் மஸ்க், யுஎஸ்எய்டு அமைப்பை கிரிமினல் அமைப்பு என கூறி உள்ளார். இதன் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. வெளிநாட்டு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்க மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் தண்டத்திற்கு செலவிடப்படுவதாக டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, ஓரினச் சேர்க்கையாளர்கள், தன்பாலினத்தவர்களை கொண்ட எல்ஜிபிடி அமைப்பிற்காக யுஎஸ்எய்டு அமைப்பு பல கோடிகளை ஆண்டுதோறும் செலவிட்டு வருவதாக அவர்கள் கூறி உள்ளனர். எந்த நாட்டிற்கும் நிதி உதவியை யுஎஸ்எய்டு அமைப்பு நேரடியாக தருவதில்லை. அங்குள்ள பிற அமைப்புகளுடன் இணைந்து மனிதாபிமான பணிகளை மேற்கொள்கிறது.
இதுவரை வழங்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய நிதி உதவிகள்:
* ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமையை நசுக்கும் தலிபான்களுக்கு காண்டம் விநியோகிக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை கூறிய குடியரசு கட்சி எம்பி பிரையன் மஸ்த், ‘‘இந்த நிதியை நிறுத்துவதால் யாரும் சாகப் போவதில்லை. அதனால் இனியும் நாங்கள் தலிபான்களுக்கு காண்டம் தரப் போவதில்லை’’ என கடுமையாக கூறி உள்ளார்.
* கொலம்பியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் இசை நிகழ்ச்சிக்காக ரூ.40 லட்சம் நிதி.
* ஈகுவடார் நாட்டில் எல்ஜிபிடி குழுவினர் ஆடை அலங்கார ஊர்வலம் நடத்த ரூ.20 லட்சம் நிதி.
* கரீபியன் தீவுகளில் எல்ஜிபிடி குழுவினருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்க ரூ.25 கோடி.
* அர்ஜென்டினாவில் எல்ஜிபிடி மற்றும் பெண் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் பருவநிலை மாற்றம் குறித்த செமினார்களை நடத்த ரூ.50 லட்சம்.
* கவுதமாலாவில் பாலினம் மாறவும், எல்ஜிபிடி செயல்பாடுகளுக்கும் ரூ.17 கோடி.
* பெரு நாட்டில் எல்ஜிபிடி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை மையமாகக் கொண்ட காமிக் புத்தகங்களை உருவாக்க ரூ.27 லட்சம்.
* நேபாளத்தில் கடவுள் மறுப்பை பரப்ப ரூ.4 கோடி தரப்படுகிறது.
* இதுதவிர, காசாவில் மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுப்பி சிறிய துறைமுகம் அமைக்க பல கோடி நிதி உதவி. இதை ஹமாஸ் போராளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். சிரியாவில் அல் கொய்தாவின் நூற்றுக்கணக்கான போராளிகளுக்கு உணவு, ஆப்கானிஸ்தானில் கசாகசா பயிரிட பல லட்சங்கள், உலகிற்கே கொரோனா பரவ காரணமான சீனாவின் வுகான் ஆய்வகத்துடன் தொடர்புடைய இகோஹெல்த் அலையன்ஸ் நிறுவனத்திற்கு நிதி உதவி ஆகியவை சர்ச்சையாகி உள்ளன. இவை அனைத்தும் குடியரசு கட்சியினர் மற்றும் எலான் மஸ்க் கூறும் குற்றச்சாட்டுகள். இந்த நிதி அனைத்தும் யுஎஸ்எய்டு வழங்கும் மொத்த நிதியில் வெகு சொற்பம் என்றாலும் வீணாகும் இதுபோன்ற நிதிகளை தடுப்பதே தங்களின் நோக்கம் என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி எம்பிக்கள் கூறுகின்றனர்.
* இந்தியாவுக்கு பாதிப்பா?
இந்தியாவிலும் யுஎஸ்எய்டு அமைப்பின் நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிதி நிறுத்துவதால் தனியார் அமைப்புகளின் சில கல்வித் திட்டங்கள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள எல்ஜிபிடி அமைப்புகளும் யுஎஸ்எய்டு நிதி உதவியை பெறுகின்றன. புனேவைச் சேர்ந்த எம்ஐஎஸ்டி அறக்கட்டளையின் நிறுவனர் ஷியாம் கொன்னூர் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் அமைப்பிற்கும் யுஎஸ்எய்டு அமைப்பு நிதி உதவி வழங்கி வந்தது. எல்ஜிபிடி பிரிவினர் இடையே எச்ஐவி தடுப்பு பணிகளுக்காக நாங்கள் நிதி பெற்று வந்தோம். அந்த நிதி மூலம் எல்ஜிபிடி பிரிவினருக்கு எச்ஐவி தடுப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்களை வழங்கி வருகிறோம்’’ என்றார்.
* மொத்த நிதி உதவி எவ்வளவு?
கடந்த 2023ல் வெளிநாட்டு நிதி உதவியாக சுமார் ரூ.6 லட்சம் கோடியை அமெரிக்கா வழங்கி உள்ளது. உலகிலேயே வெளிநாடுகளின் மேம்பாட்டிற்காக நலனுக்காக அதிக நிதி ஒதுக்கும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
* எப்போது தொடங்கியது?
கடந்த 1961ம் ஆண்டு சோவியத் யூனியனுடன் பனிப்போர் நிலவி வந்த காலத்தில் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு ஆதரவை திரட்ட அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி, யுஎஸ்எய்டு அமைப்பை தொடங்கினார். இது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு.
* பைடன் ஆட்சியில் அதிக நிதி
டிரம்பின் முதலாம் ஆட்சிக் காலத்தில் யுஎஸ்எய்டு அமைப்பு இந்தியாவுக்கு சராசரியாக ரூ.800 கோடி வழங்கி வந்தது. இதுவே முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் வெகுவாக அதிகரிக்கப்பட்டது. 2022ல் இந்தியாவுக்கு ரூ.1900 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2024ல் ரூ.1300 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.