மாஸ்கோவில் உள்ள ஆங்கிலோ-அமெரிக்கன் பள்ளியில், 2012-ஆம் ஆண்டு முதல் வரலாற்று ஆசிரியராக பணியாற்றிவந்தவர் மார்க் ஃபோகல். 2021-ஆம் ஆண்டில் மாஸ்கோவுக்கு திரும்பியபோது, 27 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தங்களது நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கரை ரஷ்ய அரசு விடுவித்துள்ளது. இந்த சூழலில், ரஷ்யாவுடன் நில பரிமாற்றம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் கூறியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக போர் நீடித்து வருவதால், இருதரப்புக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக உறுதியளித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, உயிரிழப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்ததாக டிரம்ப் கூறியிருந்தார். இந்த சூழலில், ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மார்க் ஃபோகலை விடுவிக்க அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
மாஸ்கோவில் உள்ள ஆங்கிலோ-அமெரிக்கன் பள்ளியில், 2012-ஆம் ஆண்டு முதல் வரலாற்று ஆசிரியராக பணியாற்றிவந்தவர் மார்க் ஃபோகல். 2021-ஆம் ஆண்டில் மாஸ்கோவுக்கு திரும்பியபோது, 27 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். மருத்துவக் காரணங்களுக்காக போதைப் பொருளை கொண்டுவந்ததாக கூறியபோதிலும், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்கோஃப் பயணம் மேற்கொண்டு, பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, 63 வயதான ஆசிரியர் மார்க் ஃபோகல் விடுவிக்கப்பட்டு, அமெரிக்கா திரும்பினார்.
இந்த சூழலில், ரஷ்யாவுடன் நிலப் பங்கீடு செய்துகொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். விரிவான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஒரு பகுதியை விட்டுக் கொடுத்து, மற்றொரு பகுதியை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா இல்லாமல் எந்தவொரு பாதுகாப்பு உத்தரவாதமும், உண்மையான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்காது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை விட்டுக் கொடுத்து, வேறு பகுதியை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. இது 3 ஆண்டுகால போரில், உக்ரைனின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. டிரம்ப் பதவியேற்றபிறகு, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வந்து, இருதரப்பும் சிறைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். தற்போது, ரஷ்யா, உக்ரைனில் நடந்துவரும் அடுத்தடுத்த நிகழ்வுகள், இரு நாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜெலன்ஸ்கியும், புதினைப் போலவே, அமைதியை உருவாக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள் இறப்பதை என்னால் பார்க்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். ஜெர்மனியின் முனிச் நகரில் நாளை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.