சவுதியை மீண்டும் சீண்டிய இஸ்ரேல்.. நெதன்யாகு கொடுத்த பதிலடி.. டிரம்புக்கு வந்த புது தலைவலி
08 Feb,2025
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது. பாலஸ்தீனம் என்ற நாடே இல்லை. வேண்டுமென்றால் உங்கள் நாட்டின் ஒருபகுதியில் தனி பாலஸ்தீனத்தை உருவாக்கி கொள்ளுங்கள் என்று சவுதி அரேபியாவுக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையே கடும் மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு புதிய சிக்கல் ஏற்பட உள்ளது. இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே சுமூக உறவு என்பது இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் போரை தொடங்கியது. இந்த போரை மனிதாபிமான அடிப்படையில் நிறுத்த வேண்டும் என்று சவுதி அரேபியா கூறியது. ஆனால் இஸ்ரேல் கேட்கவில்லை. இதையடுத்து இருநாடுகள் இடையேயான உறவும் என்பது இன்னும் மோசமானது. அதோடு பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேல் எப்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறதோ அப்போது தான் அந்த நாட்டுடன் தூதரகம் உள்பட பிற வழிகளில் உறவு என்பது வைக்கப்படும் என்று சவுதி அரேபியா கூறியது.
இதற்கிடையே தான் கடந்த 4ம் தேதி அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, டொனால்ட் டிரம்ப், ‛‛காசாவை அமெரிக்கா கைப்பற்றும். அங்குள்ள கட்டட கழிவுகளை அகற்றி புதிதாக வீடு கட்டி கொடுக்கப்படும். இதனால் காசா மக்கள் பிற நாடுகளுக்கு செல்ல வேண்டும்'' என்று கூறினார்.
y இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் சவுதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த பிரஸ்மீட்டில் இஸ்ரேல் - சவுதி அரேபியா உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பெஞ்சமின் நெதன்யாகு, ‛‛இஸ்ரேல் - சவுதி இடையே அமைதியான உறவு என்பதற்கு வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். ஆனால் அமைதியான சூழல் வரும் என்று நினைக்கிறேன்'' என்று கூறினார்.
இதற்கு சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை சார்பில், ‛‛பாலஸ்தீனத்தை தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அதன்பிறகு தான் இருநாடுகள் இடையேயான உ.றவு பற்றி சிந்திக்கலாம்'' என்று கூறியது. இதற்கு தான் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சேனல் 14-க்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேட்டியளித்தார். அப்போது அவர் சவுதி அரேபியாவை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: சவுதி அரேபியா விரும்பினால் தனது சொந்த நாட்டுக்குள் பாலஸ்தீனியர்களை ஒரு அரசாக அமைத்து கொள்ள முடியும். பாலஸ்தீனியர்களுக்கு என்று தனியாக இடம் வழங்க போதுமான நிலம் சவுதி அரேபியாவிடம் உள்ளது. இஸ்ரேல் அரசுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் நான் உடன்படவே மாட்டேன்.
குறிப்பாக பாலஸ்தீன் என்ற நாடே இல்லை. 2023 அக்டோபர் 7 க்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியுமா? பாலஸ்தீனம் என்ற நாடு இருந்தது. அது காசா என்று அழைக்கப்பட்டது. அது ஹமாஸ் ஆட்சியின் கீழ் வந்தது. ஹாலோகாஸ்ட்டுக்கு பிறகு மிக மோசமான படுகொலையை நாங்கள் சந்தித்தோம்'' என்று கூறியுள்ளார். இது சவுதி அரேபியாவை கோபப்படுத்தி உள்ளது. இதனால் இஸ்ரேல் - சவுதி அரேபியா உடனான உறவு என்பது இன்னும் மோசமான நிலையை நோக்கி செல்கிறது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அமெரிக்கா, சவுதி அரேபியாவுடன் நெருக்கமாக உள்ளது. இஸ்ரேலுடன் நெருக்கமாக உள்ளது. சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகியவை மத்திய கிழக்கில் இருந்து கொண்டு எதிரும் புதிருமாக உள்ளன. இதனால் இருநாடுகளையும் இணைக்க முந்தைய பதவிக்காலத்திலேயே டிரம்ப் நடவடிக்கை எடுத்தார். ஆனால் அதற்குள் அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.
இப்போதும் கூட சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உறவை சுமூகமாக்க வேண்டும் என்று தான் டிரம்ப் நினைக்கிறார். ஆனால் பாலஸ்தீனம் விவகாரத்தில் இருநாடுகள் இடையே ஒருமித்த கருத்து என்பது வராத நிலை உள்ளது. அதோடு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் சமீபத்தில் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். இருவரும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது காசாவை அமெரிக்கா கைப்பற்றும். காசா மக்களை பிறநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இதனையும் சவுதி அரேபியா ரசிக்கவில்லை. இதனால் பாலஸ்தீனத்தின் காசா விவகாரத்தில் சவுதி அரேபியா நிலைப்பாட்டால் அமெரிக்காவுக்கும் புது தலைவலி ஏற்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.