டிரம்புடன் + நெதன்யாகு மீட்டிங் -ஈரான் சுரங்கம் முழுவதும் ஏவுகணைகள்".. !
04 Feb,2025
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார். இது ஈரானுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஈரான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பூமிக்கடியில் சுரங்கம் உருவாக்கி உள்ள ஏவுகணை நகரை ஈரான் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. பூமிக்கடியில் ஏவுகணை நகரமா? அப்படினா என்ன? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி பார்க்கலாம். ஈரான்... எண்ணெய் வளமிக்க நாடு.. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய நாடாக உள்ளது. இந்த ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நீண்டகாலமாக பிரச்சனை உள்ளது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே தான் தற்போது ஈரான் - இஸ்ரேல் இடையேயும் கடந்த ஆண்டு பிரச்சனை வெடித்தது. 2023ல் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா மீது போர் தொடுத்தது. இதற்கு அங்கு செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினர் தான் காரணம். இவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கியதால் தான் அந்த நாடு காசாவில் போரை தொடங்கியது. இந்த போருக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்படும் தனது ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லாவை வைத்து ஈரான் தாக்க தொடங்கியது. அதுமட்டுமின்றி ஈரானும், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்கியது. இப்படி இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது வலுத்தது. இந்த விவகாரங்களில் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா உள்ளது.
அமெரிக்கா ஏற்கனவே பகையாளியாக உள்ள நிலையில் இஸ்ரேலும், ஈரானுக்கு எதிரியாக மாறி உள்ளது. இப்படியான சூழலில் தான் இன்று அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்திக்க உள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் தலைவராக அவரை நெதன்யாகு சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது காசா - இஸ்ரேல் போர் உள்பட மத்திய கிழக்கு பிராந்திய விவகாரங்கள் பற்றி இருதலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
இது ஈரானுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தங்கள் நாட்டை குறிவைக்கலாம் என்று ஈரான் தலைவர்கள் நினைக்கின்றனர். இதனால் தற்போது ஈரான் தங்களின் படை வலிமைகளை தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஈரான் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அமெரிக்கா, இஸ்ரேல் மட்டுமின்றி ஈரானுடன் மோதி வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளது. சிறப்பு என்னவென்றால் இந்த ஏவுகணைகள் அனைத்தும் பூமிக்கடியில் வைக்கப்பட்டுள்ளது. பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி அதன் உள்ளே ஏவுகணைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
மோதல் ஏற்படும்போது பூமிக்கடியில் உள்ள சுரங்கத்தில் இருந்து ஏவுகணைகளை எடுத்து சுமூகமாக பயன்படுத்த முடியும். இதற்கான வசதிகளை ஈரான் செய்துள்ளது. ஏவுகணையை சுமந்து செல்லும் வாகனங்கள் சென்று வர வசதியாகவும் இந்த சுரங்கம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் இருப்பது அனைத்தும் ஏவுகணைகள். போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்கும் வகையில் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளது. இந்த ஏவுகணை என்பது 1,000 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது.அதேபோல் பாலிஸ்டிக் ஏவுகணைகள், குரூஸ் வகை ஏவுகணைகள் இருப்பது வீடியோவில் தெரிகிறது. அதுமட்டுமின்றி ஏவுகணையை சுமந்து செல்லும் லாரிகளும் இருக்கின்றன. உடனடியாக ஏவும் வகையில் லாரிகளில் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை தாக்க வேண்டும் என்று நினைத்தால் பூமிக்கடியில் உள்ள சுரங்கத்தில் இருந்து அந்த லாரி வெளியே வரும். அதன்பிறகு லாரியில் இருந்து ஏவுகணை எதிரிகளின் இலக்கை நோக்கி பறந்து சென்று தாக்கும். இதுதொடர்பான காட்சி வீடியோவில் உள்ளது. இந்த அனைத்து ஏவுகணைகளையும் உள்ளடக்கிய இந்த இடத்துக்கு ஏவுகணை நகர் (Missile City) என்று சொல்கின்றனர். இது ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுரங்க ஏவுகணை நகரை அந்த நாட்டின் படைப்பிரிவு தலைமை கமாண்டர் ச மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி பார்வையிட்டுள்ளார். ஈரான் சமீபத்தில் அந்த நாட்டின் பாதுகாப்பு படை தினத்தை கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தில் ஈரான் ஆயுதப்படையின் மேஜர் ஜெனரல் முகமது பாகேரி பங்கேற்றார். அதேநாளில் தான் இந்த வீடியோ எடுத்து வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான் இப்படி பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி அதில் ஏவுகணைகள், அதிவிரைவு கப்பல்களை வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 2 வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி 18 ம் தேதி பூமிக்கடியில் உள்ள கடற்படை சுரங்கத்தை ஈரான் உலகுக்கு காட்டியது. அதற்கு முன்பாக ஜனவரி 10ம் தேதி பூமிக்கடியில் உள்ள ஏவுகணை நகரம் பற்றிய வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்துக்குள் இது ஈரான் வெளியிட்ட 3வது வீடியோவாகும். இதன்மூலம் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு முக்கிய மெசேஜை சொல்கிறது. நாங்களில் பாதுகாப்பு துறையில் பலமாக உள்ளோம். எங்களிடம் மோதுவதற்குள் பலமுறை யோசித்து கொள்ளுங்கள் என்று அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ஈரான் மெசேஜ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.