ராணுவம் சரணடைந்த நிலையில் காங்கோவின் கோமா நகரை கிளர்ச்சிப்படை கைப்பற்றியது: போர் பதற்றத்தால் மக்கள் தப்பி ஓட்டம்
28 Jan,2025
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ருவாண்டோ ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே பல ஆண்டாக மோதல் நிலவி வருகிறது. கனிம வளம் மிகுந்த இப்பிராந்தியத்தை கைப்பற்ற சுமார் 100 கிளர்ச்சிப்படைகள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இதில், அண்டை நாடான ருவாண்டோவின் ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படை சமீப நாட்களாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது.
காங்கோவின் மிகப்பெரிய நகரமான கோமா நகரை கைப்பற்றி விட்டதாக எம்23 கிளர்ச்சிப் படை நேற்று அறிவித்தது. காங்கோவின் சில ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர். போர் மூளும் அபாயம் இருப்பதால் கோமா மக்கள் பாதுகாப்பான இடம் தேடி நகரை விட்டு வெளியேறி வருகின்றனர். சிலர் ருவாண்டோவில் தஞ்சமடையவும் முயற்சிக்கின்றனர். சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும் நகரை கிளர்ச்சிப்படை கைப்பற்றியிருப்பது நிலைமையை மிக மோசமாக்கி இருப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.