அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கான் அகதிகளிற்கும் தடை - டிரம்ப் உத்தரவில் கைச்சாத்திட்டார்
22 Jan,2025
அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.
பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார்.
இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பான ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் பணிபுரிந்த பாதுகாப்பு படையினரின் குடும்ப உறுப்பினர்கள் பிள்ளைகள் அமெரிக்காவில் ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்புpனர்களுடன் இணைவதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் இதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலையில் உள்ளனர் என அகதிகள் மீள்குடியேற்றம் தொடர்பான ஆர்வலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய உத்தரவை தொடர்ந்து 27 ம் திகதி முதல் அமெரிக்காவிற்கு பயணிக்கும் விமானங்களில் ஏறுவதற்கு ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு அனுமதி மறுக்கப்படும்.
தலிபான் 2021 இல் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட பலரின் பாதுகாப்பு தொடர்பில் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் வாக்குறுதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.