அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்ற நிலையில் அதற்கு முன்பாக ஈரான் வெளியிட்ட வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிடம் தங்களின் கடற்படை வலிமையை காட்டும் வகையில் அந்த வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது? வாங்க பார்க்கலாம். அமெரிக்கா - ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. இருநாடுகளும் இப்போதும் எதிரெதிர் துருவங்களாக தான் உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இருப்பினும் ஈரான் எண்ணெய் வளமிக்க நாடு. இதனால் கச்சா எண்ணெய் பிசினஸ் மூலம் அமெரிக்கா பொருளாதார தடைகளை தாண்டி ஈரான் ஓரளவு தாக்குப்பிடித்து வருகிறது.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சுத்தமாக பிடிக்காது. இதனால் தான் இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலின்போது கூட டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு ஒரு கோரிக்கை வைத்தார். ஈரானின் முக்கிய பாதுகாப்பு தளங்களையும், அணு உலைகளையும் தான் தாக்க வேண்டும் என்று இஸ்ரேலிடம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த கருத்தை டொனால்ட் டிரம்ப் கூறியபோது அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக தான் இருந்தார். ஆனால் தற்போது அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று நேற்று அந்த பதவியையும் நேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இதனால் வரும் நாட்களில் உலக அரசியல் என்பது முற்றிலும் மாறுபடும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக டொனால்ட் டிரம்ப் நடவடிக்கையால் சீனா,
கனடா மற்றும் ஈரான் நாடுகள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரேலுடன் சேர்ந்து டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு ஸ்கெட்ச் போடலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் பல வழிகளில் ஈரானை, டொனால்ட் டிரம்ப் மிரட்டி பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் பதவியேற்புக்கு முன்பாக ஈரான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ என்பது ஈரானின் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சுரங்கம் போன்ற அமைப்பில் ஸ்பீட் போட் (Speed Boat) ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஸ்பீட் போட்டுகளை பயன்படுத்தி கடலில் இருந்தே ஏவுகணைகளை ஏவி எதிரிகள் மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும். இதில் சுவாரசியம் என்னவென்றால் அந்த சுரங்கம் என்பது பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பூமியில் இருந்து 500 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து அதில் தான் ஈரான் தனது கடற்படைக்கு சொந்தமான ஸ்பீட் போட்டுகளை நிறுத்தி வைத்துள்ளது. Advertisement மேலும் இந்த ஸ்பீட் போட்களில் இருந்து குரூஸ் (Cruise) வகை ஏவுகணையும் ஏவி தாக்குதல் நடத்த முடியும் என்றும், தாரேக் - கிளாஸ் ரோடரில் இருந்து தப்பவும் முடியும் என்று ஈரான் அரசு தொலைக்காட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஸ்பீட் போட்டில் ஏவப்படும் ஏவுகணை தொடர்பான காட்சிகளும் உள்ளன. மேலும் இந்த கடற்படை தளத்தில் ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையின் தலைமை ஜெனரல் ஹுசைன் சலாமி,கடற்படையின் ரியர் அட்மிரல் அலிரிஜா தங்சிரியுடன் பார்வையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அதில் ஹுசைன் சலாமி, ‛‛பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கடற்படை தளங்களில் இதுவும் ஒன்று. இந் கடற்படை தளத்தில் உள்ள ஸ்பீட் போட்டுகளை பயன்படுத்தி லாங்க் ரேஞ்ச் ஏவுகணையை ஏவ முடியும். அதோடு கடலில் திறமையாக போரை முன்னெடுக்க முடியும். பெரிய மற்றும் சிறிய எதிரிகளை எதிர்த்து கடற்பரப்பில் திறமையாக போரிட்டு வெற்றி பெறும் வகையில் ஈரான் உள்ளது. இப்போது நீங்கள் பார்ப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக எங்களின் நாடு மேம்படுத்திய ஈரான் நாட்டின் கடற்படையின் சிறு பகுதி தான் '' என்று கூறியுள்ளார்.
இருப்பினும் பூமிக்கடியில் மிகவும் ரகசியமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ‛அண்டர்கிரவுண்ட் கடற்படை தளம்' எங்கு உள்ளது என்ற விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்த அண்டர்கிரவுண்ட் கடற்படை தளம் என்பது ஈரானின் தெற்கு கடல் பகுதியான பெர்ஷியன் வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடா ஆகிய இடங்களை சுற்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் ஈரான் இதுபற்றி தெரிவித்தால் மட்டுமே உண்மை என்பது தெரியும்.
மேலும் இந்த வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளதன் பின்னணியில் முக்கிய மெசேஜ் ஒன்று உள்ளது. அதாவது அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் உள்ளது. டொனால்ட் டிரம்பும் தீவிர ஈரான் எதிர்ப்பாளர். இதனால் அவர் விரைவில் ஈரானுக்கு எதிரான வேலைகளில் ஈடுபடலாம். இதனால் டொனால்ட் டிரம்புக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ரகசிய அண்டர்கிரவுண்ட் கடற்படை தளம் குறித்த வீடியோவை ஈரான் வெளியிட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
ஏனென்றால் சமீபத்தில் இஸ்ரேலுடன், ஈரானுக்கு மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பும் வெற்றி பெற்றார். இதனால் டொனால்ட் டிரம்ப் ஈரானை சீண்டலாம் என்று அந்த நாட்டு தலைவர்கள் நினைக்கின்றனர். இதனால் தான் சமீபத்தில் போர் பயிற்சியை ஈரான் தொடங்கி உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய பிறகு ஈரான் நாடான்ஸ் மற்றம் போர்டோ என்ற அணுஆயுத வசதி கொண்ட இடங்களுக்கு அருகே போர் பயிற்சியை தொடங்கியது. இதன் அடுத்தக்கட்டமாக தான் நாங்கள் ஒன்றும் டம்மி இல்லை. எங்களாலும் எதிரிகளை தாக்கி அழிக்க முடியும். கடற்படை என்பது வலிமையானதாக மாற்றி உள்ளோம் என்ற மெசேஜை டொனால்ட் டிரம்புக்கு அனுப்பும் வகையில் தான் ஈரான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.