மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு நடுவே இஸ்ரேல் - துருக்கி போர் ஏற்படலாம் என்று பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு அந்த நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சார்பில் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில் துருக்கி ஒட்டோமன் பேரரசை உருவாக்கும் நோக்கத்தில் இந்த போர் இருக்கலாம், இஸ்ரேல் பிரச்சனையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நாம் பல்வேறு போர்களை பார்த்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதேபோல் பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த 2 போர்களிலும் சுமார் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது வரை இந்த 2 போர்களும் முடிவுக்கு வருவது போல் இல்லை. மாறாக போர் தீவிரமாகும் சூழல் தான் நீடித்து வருகிறது. இதுதவிர இஸ்ரேல் - ஈரான், இஸ்ரேல் - லெபனானில் இயங்கும் ஹெஸ்புல்லா இடையேயும் மோதல் உள்ளது. அதேபோல் இஸ்ரேல் - சிரியா இடையேயும் பிரச்சனை நீடித்து வருகிறது.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக இஸ்ரேல் - துருக்கி இடையே போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தகவல் சென்றுள்ளதோடு, உஷாராக இருக்க வேண்டும் என்று வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இஸ்ரேல் அரசு சார்பில் அந்த நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் ஜேக்கப் நாகல் தலைமையில் நாகல் கமிட்டி என்பது அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி என்பது நாட்டின் பாதுகாப்புக்காக வரும்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள், ராணுவ கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் 2030ம் ஆண்டு வரை பாதுகாப்பு துறைக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
தேபோல் இஸ்ரேல் நாட்டுடன் பிற நாடுகளின் மோதல் இன்னும் முடிந்துவிடவில்லை. துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் நம் நாட்டை குறிவைத்துள்ளார். ஒட்டோமன் பேரரசை(Ottoman Empire) உருவாக்கும் நோக்கத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் இருக்கிறார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளது. இதனால் துருக்கி நம்முடன் நேரடியாக மோதலை தொடங்கலாம். எனவே நம் நாடும் தொடர்ந்து உஷாராக இருக்க வேண்டும். துருக்கியை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். அதேபோல் ஈரான், துருக்கி, சிரியாவிடம் இருந்தும் பிரச்சனைகள் வரலாம். குறிப்பாக துருக்கி ஆதரவு பெற்ற படைகளால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பிரச்சனைகள் வரலாம்'' என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அடிப்படை என்பது மொத்தமாக மாறி உள்ளதை காண முடிகிறது. ஈரான் நமக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தற்போது புதிதாக இன்னொரு சக்தி களத்தில் நுழைந்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் நாம் அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இந்த அறிக்கை என்பது எதிர்காலத்தை இஸ்ரேலை பாதுகாக்கும் ரோடு மேப்பாக உள்ளது. அதன்படி எதிர்காலத்தில் நாம் நகர்வோம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் துருக்கி நாட்டின் பெயரை கூறாமல் அந்த நாட்டின் மிரட்டலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகும் என்பதை நெதன்யாகு உறுதி செய்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒட்டோமன் பேரரசு என்பது கிபி 14ம் நூற்றாண்டு முதல் கிபி 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இருந்த ஒரு மன்னராட்சி பகுதியாகும். துருக்கியை தலைமையிடமாக கொண்டு இந்த ஒட்டோமன் பேரரசு செயல்பட்டு வருகிறது. இந்த பேரரசின் நிலப்பகுதிகள் தற்போது பல நாடுகளில் சிதறி கிடக்கின்றன. அதாவது துருக்கி, பல்கேரியா, அல்பேனியா, ரோமானியா, கிரீஸ், கொசோவா, போஸ்னியா மற்றும் கெர்ஜிகோவினா, உக்ரைன், இஸ்ரேல், ரஷ்யா, இத்தாலி, மோன்டினிகுரோ, ஈரான், சிரியா, லெபனான்,பாலஸ்தீனனம், எகிப்து, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்தில் அந்த பேரரசியின் நிலப்பகுதிகள் பிற நாடுகள் வசம் சென்றன.
தற்போது துருக்கி அதிபர் எர்டோகன் தனது நாட்டை சுற்றியுள்ள பிற பகுதிகளை பிடித்து ஒட்டோமன் பேரரசு பகுதிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் துருக்கியுடன் எல்லையை பகிர்ந்து வரும் சிரியாவில் அந்த நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி கவிழ்ந்துள்ளது. லெபனானிலும் அரசியல் குழப்பம் நீண்டகாலமாக உள்ளது. இதனால் அந்த நாடுகளை தன்வசப்படுத்தி இஸ்ரேலுடன் துருக்கி மோதலை தொடங்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் இஸ்ரேல் - துருக்கி இடையே போர் வெடிக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.