ஆபாச பட நடிகை வழக்கில் தண்டனையை தள்ளி வைக்கும் அதிபர் டிரம்ப் முயற்சி தோல்வி
08 Jan,2025
அமெரிக்காவின் புதிய அதிபராக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே, கடந்த 2016ம் ஆண்டு, தன்னுடைய பாலியல் உறவு பற்றி வெளியில் பேசாமல் இருக்க ஆபாச பட நடிகைக்கு தேர்தல் நிதியிலிருந்து பணம் கொடுத்ததாக டிரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என 2024ம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப், இது தேர்தல் பிரசாரத்தில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி என்றார்.
அவர் வரும் 20ம் தேதி மீண்டும் அதிபராக உள்ள நிலையில், இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ஜூவான் மெர்சன் கடந்த 4ம் தேதி அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பதவியேற்கும் வரை தண்டனையை வெளியிடாமல் ஒத்திவைக்க வேண்டுமென டிரம்ப் தரப்பில் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கடைசி முயற்சியாக முறையிட்டனர். இதை ஏற்க நீதிபதி மெர்சன் மறுத்துவிட்டார். எனவே ஜனவரி 10ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும்.