சாலை விதி மீறுபவரை காட்டிக்கொடுத்தால் ரூ.17000 பரிசு!
08 Jan,2025
வியட்நாம் அரசு சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 1-ஆம் தேதி முதல் சாலை விதி மீறலை ஆதாரத்துடன் புகார் அளிக்கும் நபர்களுக்கு 200 டாலர் வரை பரிசு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.17144.15. அதோடு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தும் முயற்சியாக கூடுதல் கேமராக்கள் பொருத்தி, இதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட இனிவரும் நாட்களில் 30 சதவீதம் அதிக அபராதம் வசூலிக்கப்பட
இருப்பதாகவும் கூறப்படுகிறது. போக்குவரத்து காவலர்கள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் சாலை போக்குவரத்தை சீர் செய்ய முடியாது என்ற காரணத்தினால் இந்த திட்டத்தை வியட்நாம் அரசு கொண்டு வந்துள்ளது. இதர நடவடிக்கைகளாக சாலை விதி மீறல்களுக்கு கடுமையான தண்டனைகளும் அமலுக்கு வந்துள்ளன.
இந்த மாதம் முதல் வியட்நாம் குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் சாலை பாதுகாப்பு மீறல்கள் குறித்த ஆதாரங்களை வழங்கினால் அவர்களுக்கு 200 டாலர் வரை ரிவார்டுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதாவது அபராதத் தொகையில் 10 சதவீதம் வரை வழங்கப்படவுள்ளது. நீங்கள் புகார் அளிக்கும் சம்பவத்தை பொறுத்து பே அவுட் மாறுபடலாம். வியட்நாம் அரசு இந்தத் திட்டம் சாலைகளைப் பாதுகாப்பானதாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. கூடுதலாக அபராதத்தின் மூலம் திரட்டப்படும் பணம் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல்,
வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குதல், தகவல் தொடர்பு அமைப்புகளை மேம்படுத்துதல், போக்குவரத்து தளங்களை பராமரித்தல், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பணம் செலுத்துதல் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட இருப்பதாக வியட்நாம் நெட் பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.
வியட்நாமில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணமாக, ரெட் சிக்னலை மீறி செல்லும் குற்றத்திற்கு அபராதமாக முன்னர் 4-6 மில்லியன் வியட்நாமியன் டாங் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்தத் தொகை 18-20 மில்லியன் வியட்நாமிய டாங்காக உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவது, சரக்குகளை தவறாகக் கட்டுவது, போலீஸ் உத்தரவுகளை மீறுவது போன்ற சிறிய குற்றங்களுக்கும் தற்போது முன்பு விதிக்கப்பட்ட அபராதத்தை விட 30 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த மாதம் முதல் வியட்னாமிய "VNeTraffic" என்ற அப்ளிகேஷன் மூலம் ஓட்டுநர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்படும். இதே அப்ளிகேஷன் மூலம் போலீசாருக்கு சாலை விதிமீறல் குறித்து புகார் எழுப்பலாம்.