அதிபர் ஜி ஜின்பிங்கிடம் இருந்து பறந்த உத்தரவு! சீனாமுழுக்க
29 Dec,2024
அண்டை நாடான சீனாவில் ஒற்றை ஆட்சி முறையே அமலில் இருக்கிறது. அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் எடுக்கும் முடிவுகளே அங்கு இறுதி முடிவாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சீனாவில் இப்போது நாடு முழுக்க சிறைகள் கட்டப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது ஜி ஜின்பிங் அடுத்து யார் மீது நடவடிக்கை எடுப்பார் என்ற கேள்விகளையும் எழுப்புவதாக இருக்கிறது. ஒற்றை ஆட்சி முறை அமலில் இருக்கும் சீனாவில் திடீர் திடீரென பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், அதிபர் ஜி ஜின்பிங் எடுக்கும் முடிவுகளே இறுதி முடிவாக இருக்கும். சீனா கட்டும் சிறைகள்: இதற்கிடையே சீனா இப்போது திடீரென நாடு முழுக்க சிறைகளைக் கட்டியுள்ளது. நாடு முழுக்க சுமார் 200க்கும் மேற்பட்ட சிறைகளைச் சீன கட்டுகிறதாம். இவை அனைத்துமே சாதாரண சிறைகள் இல்லை..
அனைத்துமே சிறப்பு வசதிகளைக் கொண்ட சிறைகளாக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திடீரென எதற்காக இவ்வளவு சிறைகளை ஒரே நேரத்தில் கட்டுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அதற்கான பதிலை நாம் பார்க்கலாம். அதாவது சீனா அதிபர் ஜி ஜின்பிங் எப்போதும் தன்னை ஊழலுக்கு எதிரான நபர் போலவே காட்டிக் கொள்வார். தனது கட்சியில் ஊழல் பேர்வழிகள் இருப்பது கண்டறியப்பட்டால்.. அவர்கள் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கையை எடுப்பார். ஏற்கனவே கடந்த காலங்களில் சில முறை அவர் இதுபோல செய்துள்ளார். இதற்கிடையே அதன் ஒரு பகுதியாகவே இப்போது நாடு முழுவதும் 200 சிறைகளை அந்நாட்டு அரசு கட்டி வருகிறது.
லியுஷி சிறைகள்: லியுஷி என்று அழைக்கப்படும் இந்த தடுப்பு மையங்களில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என முக்கிய புள்ளிகள் கூட அடைக்கப்படுவார்கள். இந்த சிறையில் அடைக்கப்படுவோர் ஆறு மாதங்கள் வரை வெளியாட்கள் யாரையும் சந்திக்க முடியாது. வழக்கறிஞர்கள், அவ்வளவு ஏன் சட்ட ஆலோசகர்களைக் கூட அவர்களால் சந்திக்க முடியாது. கடந்த 2012ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து,
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனா ராணுவத்தின் மீதான தனது அதிகாரத்தை உறுதி செய்ய அதிபர் ஜி ஜின்பிங் இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பார். ஊழல் ஒழிப்பு எனச் சொன்னாலும் பல நேரங்களில் அவர் கட்சியில் தனக்கு எதிராக வளர்வோரை ஒடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பார் எனக் கூறப்படுகிறது. கடந்தாண்டு அதிபர் பதவியில் நிரந்தரமாக இருக்கும் வகையில் ஜி ஜின்பிங் சட்டத்தை மாற்றும் முன்பும் கூட இதே போல ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் தன்னை எதிர்க்கும் பலரையும் சிறையில் தள்ளியது குறிப்பிடத்தக்கது
மிக மோசம்: முன்பு இந்த சிறைச்சாலைகளை ஷுவாங்குய் என்று அழைத்தனர். இருப்பினும், ஷுவாங்குயில் கைதிகள் சித்தராவதைச் செய்யப்படுவதாகப் பலரும் கூறிய நிலையில், லியுஷி சிறைகள் அமைக்கப்பட்டன. பெயர் மாறினாலும் உள்ளே கைதிகள் நடத்தப்படும் விதம் மாறவில்லை என்றே கூறப்படுகிறது. முன்பு ஒரு முறை இந்த சிறையில் சென் ஜியான்ஜுன் என்ற அதிகாரி அடைக்கப்பட்ட நிலையில்,
அவர் தூங்க விடாமல் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் தினசரி 18 மணி நேரம் வரை உட்கார்ந்தே இருக்கக் கட்டாயப்படுத்தியதாகவும் அவரது மகள் குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது. லியுஜி தடுப்பு மையங்கள்: கொரோனாவுக்கு பிறகு மட்டும் நாடு முழுக்க இதுபோல 218 லியுஜி தடுப்பு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் ஊழல் ஒழிப்பு என்று பெயரில் மிகப் பெரிய நடவடிக்கையை எடுக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, கொரோனாவுக்கு பிறகு சீனா பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பல முக்கிய நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறும் நிலையில், இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.