ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள சிரியா அதிபரிடம் விவாகரத்து கோரும் மனைவி: மீண்டும் லண்டன் திரும்ப ஆர்வம்
23 Dec,2024
சிரியா நாட்டின் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிப் படையினர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அதிபர் மாளிகையைக் கைப்பற்றி, அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தன. அதற்கு முன்னதாக அதிபர் பஷார் அல் ஆசாத், நாட்டை விட்டு தப்பியோடி ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.
தற்போது அவர் தனது மனைவி அஸ்மா அல் ஆசாத் மற்றும் குடும்பத்தினருடன் ரஷ்யாவில் தங்கியுள்ளார். இந்நிலையில் சவூதி மற்றும் துருக்கிய ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, பஷார் அல் ஆசாத்தின் சகோதரர் மஹெர் அல் ஆசாத்துக்கு ரஷ்ய அரசு புகலிடம் வழங்கப்படவில்லை.
அதனால் அவரும் அவருடன் சேர்ந்த சிலரும் ரஷ்யாவில் வீட்டுக் காவலில் உள்ளனர். அதேநேரம் மாஸ்கோவில் நிம்மதியின்றி இருக்கும் பஷார் அல் ஆசாத் மனைவி அஸ்மா அல் ஆசாத், ரஷ்யாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு செல்ல விரும்புகிறார். அதனால் தனது கணவர் பஷார் அல் ஆசாத்திடம் இருந்து விவாகரத்து கோரி லண்டனில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்காக மாஸ்கோவை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரியுள்ளார்.
அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து மற்றும் சிரியா நாட்டின் குடியுரிமை பெற்ற அஸ்மா அல் ஆசாத், லண்டனில் வசித்த சிரியா பெற்றோருக்கு பிறந்தார். தனது 25வது வயதில் பஷார் அல் ஆசாத்தை மணந்தார். அதன்பின் 2000ம் ஆண்டில் சிரியாவுக்கு குடிபெயர்ந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.