உக்ரேன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் - ரஷ்யா
                  
                     20 Dec,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
	 
	நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் வழங்கி, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்டவை ஆதரவாக செயல்படுகின்றன.
	 
	தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்ய - உக்ரேன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலு பெற்றுள்ளது.
	 
	இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரித்தானியா தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரேன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமான ரஷ்யா, உக்ரேன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது. இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட்  ட்ரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். 
	 
	அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரேன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
	 
	இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.