4 நாள் ஆபீஸ் வந்தாலே போதும்.. டோக்கியோவில் வருது மாற்றம்
10 Dec,2024
ஜப்பானில் மக்கள் தொகை சரிவு என்பது கடந்த பல ஆண்டுகளாகவே மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் டோக்கியோ நிர்வாகம் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகின் அனைத்து நாடுகளும் மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த போராடி வந்தன. ஆனால், இந்த நூற்றாண்டில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
மக்கள் தொகையை அதிகரிக்க அனைத்து நாடுகளும் போராடுகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் பல நாடுகள் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அப்படி மக்கள் தொகை சரிவால் மிகப் பெரிய பிரச்சினையைச் சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக ஜப்பான் இருக்கிறது. ஜப்பான் மக்கள் தொகை: ஏற்கனவே ஜப்பான் அதிக வயதானோரைக் கொண்ட நாடாக இருக்கிறது. அங்கு இப்போது சராசரி வயது 49.4ஆகும். ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் சராசரி வயது 28.4ஆக இருக்கிறது. ஜப்பானின் சராசரி வயது என்பது இந்தியாவின் சராசரி வயதை விட இரண்டு மடங்காக உள்ளது. அந்தளவுக்கு அங்கு வயதானோர் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது.
அங்கு மக்கள் தொகை கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிந்து வருவதே இதற்குக் காரணம். வரும் காலங்களிலும் இதுவே தொடரும் என அஞ்சப்படும் நிலையில், ஒரு காலத்தில் உழைக்கும் வயதில் இருக்கும் இளைஞர்களே இல்லாத சூழல் கூட ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் மிக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது ஜப்பானைப் பொறுத்தவரை அந்நாட்டு மக்கள் கடினமாக உழைப்பவர்கள். காலையில் அலுவலகம் வந்தால் இரவு வரை வேலை செய்யும் பழக்கம் உள்ளவர்கள். அங்கு சமூகமே அப்படி தான் இயங்குகிறது. இதனால் பல ஊழியர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் போதிய நேரத்தைச் செலவிட முடிவதில்லை. இதை உணர்ந்த அரசு மேஜர் நடவடிக்கையை எடுத்துள்ளது.
4 நாள் போதும்: குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலைக்கு வந்தால் போதும் என்று டோக்கியோ மாநகராட்சி அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார்.
பிரசவம் அல்லது குழந்தை பராமரிப்பு போன்றவற்றுக்காக ஒருவர் தங்கள் கேரியரை விடத் தேவையில்லை என்பதை உறுதி செய்யவே இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த புதிய பாலிசியின்படி டோக்கியோவில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை எடுக்கலாம். வீட்டில் குழந்தைகள் இருந்தால் சிறிய சம்பள குறைப்புடன்.. வேலை செய்யும் நேரத்தைக் கூட குறைத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினை ரொம்பவே மோசம்: பொதுவாக ஒரு நாடு இருக்கும் மக்கள்தொகையை அப்படியே பராமரிக்கக் கருவுறுதல் விகிதம் 2.1ஆக இருக்க வேண்டும். ஆனால், ஜப்பான் நாட்டில் கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு 1.2ஆகக் குறைந்தது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் அதற்குப் பலன் கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு நிலைமை ரொம்பவே தீவிரமானது.
ஜப்பான் முழுவதும் வெறும் 7,27,277 பிறப்புகள் மட்டுமே பதிவானது. அதேநேரம் 15,90,503 உயிரிழப்புகள் பதிவானது. அதாவது குழந்தை பிறப்பை விட உயிரிழப்புகள் இரண்டு மடங்கு அதிமாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஜப்பானில் மக்களே இல்லாத அபாயம் கூட ஏற்படலாம். இதன் காரணமாகவே இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க டோக்கியோ நிர்வாகம் இந்த 4 நாள் வேலை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.