மத்திய கிழக்கில் வெடிக்கும் பிராந்திய போர்.முதலில் இஸ்ரேல், ஈரான்.. அடுத்து இப்போது சிரியா!
07 Dec,2024
சிரியாவில் இப்போது திடீரென உள்நாட்டுப் போர் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஹெச்டிஎஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் திடீரென அந்நாட்டின் ராணுவம் மீது தாக்குதலை ஆரம்பித்து. கடந்த சில நாட்களில் அங்குத் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது தாரா என்ற நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுள்ளது. கடந்த சில நாட்களில் கிளர்ச்சியாளர்கள் வசம் செல்லும் நான்காவது நகரம் இதுவாகும்.
மத்திய கிழக்கில் நாடுகளில் ஒன்றான சிரியாவில் எப்போதும் உள்நாட்டுப் போர் இருந்து கொண்டே இருக்கும். அங்கு பஷர் அல் அசாத் என்பவர் தான் கடந்த 24 ஆண்டுகளாக அதிபராக இருக்கிறார். அவரை ஆட்சியில் இருந்து அகற்றப் பல முறை வன்முறை வெடித்த போதிலும், ரஷ்யாவின் ஆதரவு இருப்பதால் கிளர்ச்சியாளர்களை வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்குவார். கடந்த 2020ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அங்கு சற்று அமைதி திரும்பிய நிலையில், இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
திடீர் தாக்குதல்: கடந்த நவ. 27ம் தேதி சிரியாவில் தாக்குதலைத் தொடங்கிய ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். அங்கு அதிபர் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக ஹெச்டிஎஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் திடீரென தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இன்று அவர்கள் நடத்திய தாக்குதலில் சிரியாவின் தெற்கு நகரமான தாராவைக் கைப்பற்றி உள்ளனர். இந்த குழு சிரியாவில் கடந்த சில நாட்களில் கைப்பற்றிய நான்காவது நகரம் இதுவாகும். சிரியாவில் இப்போது திடீரென வெடித்துள்ள இந்த மோதல் அதிபர் பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
4வது நகரம்: கடந்த 2021ம் ஆண்டு அதிபர் அசாத்திற்கு எதிராக முதலில் இந்த தாரா நகரில் தான் கலகம் வெடித்தது. அப்போது ரஷ்ய உதவியுடன் அந்த அசாத் முறியடித்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் அதே தாரா நகரம் ஹெடிஎஸ் பிரிவினர் கைகளுக்குச் சென்றுள்ளது. ஜோர்டான் எல்லையில் அமைந்துள்ள இந்த தாரா நகரம் அந்த பிராந்தியத்தின் தலைநகராகவும் செயல்படுகிறது.
மேலும் இதில் சுமார் 10 லட்சம் பேர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சியாளர்களிடம் சிரிய ராணுவம் தொடர்ந்து சரணடைந்து வரும் நிலையில், அதைத் தடுக்க சிரிய அதிபர் அசாத் ஐக்கிய அமீரகம், எகிப்து, ஜோர்டான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை உதவியை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலைமை மோசமாக இருப்பதால் அசாத்தை நாட்டை விட்டு வெளியேறவும் சில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இப்போது தாக்குதல் ஏன்: அதிபர் அசாத்திற்கு எதிராகப் பல முறை வன்முறை வெடித்த போது அவருக்கு ஆதரவாக ரஷ்யா,
ஈரான் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகள் இறங்கும். இதன் காரணமாகவே அவர் தனது ஆட்சியைத் தக்கவைக்க முடிந்தது. ஆனால், இப்போது உக்ரைனில் போரில் ரஷ்யாவும் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால் ஈரான், ஹிஸ்புல்லா பலவீனமாக இருக்கிறது. இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அசாத் ஆட்சியை அகற்றிவிட வேண்டும் என்று திட்டம் போட்டு ஹெச்டிஎஸ் படையினர் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.