தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்
05 Dec,2024
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைக்கள் முடக்கப்படுவதாகவும், முன்னெப்போதை விடவும் தாலிபான்கள் இந்த விஷயத்தில் தற்போது அதிக தீவிரம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் பெண் கல்வி குறித்த ஆப்கான் அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் குரல் எழுப்பியுள்ளார். தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது புதியதாக நடக்கும் விஷயம் கிடையாது. ஏற்கனெவே கடந்த 2022ம் ஆண்டு பெண்கள்,
பல்கலைக்கழக படிப்புகளை நிறுத்த வேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர். இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் அவர்கள் எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. இப்போது தடை உத்தரவுகள் புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றன. அதாவது மாணவிகள் நர்சிங் மற்றும் மருத்துவம் தொடர்பான கல்வியை படிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடை உத்தரவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், இந்த வாழ்மொழி உத்தரவை அந்நாட்டின் கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அந்நாட்டின் மருத்துவ தேவையை பொறுத்தவரை குறைந்தபட்சம் 1 லட்சம் செவிலியர்களாவது பணியில் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் போதிய அளவுக்கு செவிலியர்கள் இல்லை. இப்படி இருக்கையில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க விடமால் செய்யும் பணிகளை தாலிபான் சிறப்பாக செய்து வருகின்றனர். தாலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரரான ரஷீத் கான், பெண் கல்வி குறித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். பிரபல ஸ்பின் பவுளரான இவர், தனது x பக்கத்தில் பெண் கல்வி குறித்து இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்தியுள்ள கருத்துகளை மேற்கோள் இட்டுள்ளார். அதாவது, "கல்வி, இஸ்லாமிய போதனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. ஆண்களும், பெண்களும் அறிவை பின்தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.
ஆப்கன் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும்; அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல, அது நமது தார்மீகக் கடமையும் கூட. "எங்கே தாடி? தொழுகையை காணோமே? சினிமா CD விற்றீர்களா? தாலிபான்களால் திணறும் ஆப்கானிஸ்தான்" ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுப்பு மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள் சமீபத்தில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த சோகத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் பரந்த கட்டமைப்பையும் ஆழமாக பாதித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
இவரது கருத்து பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கெனவே மேலை நாடுகள் ஆப்கானில் பெண்களுக்கு எதிராக நிலவும் பல்வேறு ஒடுக்குமுறைகள் குறித்து தங்கள் கண்டனத்தை வலுவாக பதிவு செய்து வருகின்றன. இப்படி இருக்கையில் அந்நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2021 வரை அமெரிக்க+பிரிட்டன்+ஆஸ்திரேலியா நாடுகளின் ஆதரவுடன் ஆட்சி இருந்தது. ஆனால் அதன் பின்னர் அமெரிக்கா அங்கிருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதனையடுத்து மீண்டும் தாலிபான்கள் ஆட்சியமைத்துள்ளனர்.