வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!
04 Dec,2024
வங்கியில் மோசடி செய்து, அதை மறைக்க வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டின் ட்ரோங் மை லான் என்ற பெண் தொழிலதிபர் பல நிறுவனங்களை தொடங்கியவர். ஆனாலும் பல்வேறு மோசடிகளை செய்ததாக, கடந்த 2022 ஆம் ஆண்டு குற்றச்சாட்டு கூறப்பட்டது.
குறிப்பாக, வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய வங்கியான சைக்கோன் வணிக வங்கியை அவர் ரகசியமாக கட்டுப்படுத்தியதும், சுமார் 12 பில்லியன் டாலர் கடன் பெற்று, அதை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. மேலும், இந்த மோசடியை மறைக்க, 5.2 மில்லியன் டாலர் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மோசடி செய்த தொகையை 75% திருப்பி செலுத்தினால், மரண தண்டனை குறைக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தொழிலதிபர் ட்ரோங் மை லான் தனது சொத்துக்களை விற்றும், நண்பர்களிடம் கடன் வாங்கியும், பணத்தை திருப்பி செலுத்த முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.