இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
“லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்” என்று அமெரிக்காவும் பிரான்ஸும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் ஊடக செய்திகளில் இருந்து இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி நமக்கு தெரிந்த தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
அதிபர் பைடன் கூறியதென்ன?
“நிரந்தர போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது”, என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
விளம்பரம்
இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்களில் ஹெஸ்பொலா தனது படைகளையும், ஆயுதங்களையும் நீலக் கோடு (Blue Line) பகுதிக்கும் அங்கிருந்து வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள லிடானி நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்து அகற்றும். நீலக் கோடு பகுதி என்பது லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற எல்லை ஆகும்.
அந்த பகுதியில் உள்ள ஹெஸ்பொலா குழுவினருக்கு பதில் லெபனான் ராணுவப் படைகள் அமர்த்தப்படுவார்கள். மீண்டும் கட்டியெழுப்ப முடியாத அளவுக்கு அங்குள்ள உள்கட்டமைப்பு, ஆயுதங்களை லெபனான் ராணுவம் அகற்றும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதே 60 நாட்களில், இஸ்ரேல் படிப்படியாக அங்கு எஞ்சியுள்ள தனது படைகளையும் பொதுமக்களையும் திரும்பப் பெறும். எல்லையின் இருபுறமும் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.
ஹெஸ்பொலா ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளது
ஹெஸ்பொலாவுக்கு மாற்றாக லெபனான் படை
ஒப்பந்தத்தின் படி லெபனான் ராணுவம் 5,000 ராணுவ வீரர்களை தெற்கில் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதில் அவர்களின் பங்கு என்ன என்பதை பற்றியும் தேவைப்பட்டால் அவர்கள் ஹெஸ்பொலாவை எதிர்கொள்வார்களா என்பது பற்றியும் கேள்விகள் எழுந்துள்ளன. அவ்வாறு எதிர்கொள்ளும் நடவடிக்கையால், ஏற்கனவே அதிகமான பிளவுகள் உள்ள நாட்டில் மேலும் பதற்றம் அதிகரிக்கக்கூடும் என்றும் கருதப்படுகின்றது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தில் தனது பொறுப்புகளை நிறைவேற்ற போதுமான பணம், படைகள் மற்றும் ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என்று லெபனான் ராணுவம் கூறியுள்ளது.
ஆனால், லெபனானின் சில சர்வதேச நட்பு நாடுகள் ஆதரவு வழங்கி, அவர்களின் இந்தப் பிரச்னைக்கு உதவ முடியும்.
ஹெஸ்பொலா இப்போது முன்பை விட பலவீனமாக உள்ளது என்றும் லெபனான் அரசாங்கம் தங்கள் நாட்டில் முழு கட்டுப்பாட்டையும் எடுத்து அதன் அதிகாரம் எல்லா இடங்களிலும் நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கு இதுவே சரியான நேரம் என்றும் பல மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.
நிரந்தர போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.
போர் நிறுத்த அமலாக்கத்தை யார் கண்காணிப்பார்கள்?
இந்த ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1701ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த தீர்மானம் 2006-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உதவியது.
தீர்மானம் 1701-இன் படி, லிடானி நதியின் தெற்கே உள்ள பகுதிகளில் லெபனான் அரசாங்கம் மற்றும் ஐ.நா.வின் அமைதி காக்கும் படையினரை தவிர, ஆயுதக் குழுக்களோ அல்லது ஆயுதங்களோ இருக்கக்கூடாது.
ஆனால் இரு தரப்பினரும் தீர்மானத்தை மீறியதாகக் கூறப்படுகின்றது.
அப்பகுதியில் விரிவான உள்கட்டமைப்புகளை உருவாக்க ஹெஸ்பொலா அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. அதே நேரத்தில் லெபனான் எல்லையில் ராணுவ விமானங்களை இயக்கியதன் மூலம் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை மீறியதாக லெபனான் கூறுகிறது.
இந்த முறை, அமெரிக்காவும் பிரான்ஸூம் தற்போதைய முத்தரப்பு குழுவில் இணையும். இதில் ஏற்கனவே ஐ.நா.வின் அமைதி காக்கும் படை, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை இருக்கின்றன.
“ஒப்பந்தம் எந்த வகையிலாவது மீறப்படுகின்றதா என இந்த குழு கண்காணிக்கும்”என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.
“இப்பகுதியில் அமெரிக்கப் போர் படைகள் இருக்காது, ஆனால் முன்பு நடந்தது போலவே லெபனான் ராணுவத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை வழங்கும். ஆனால், இந்த விஷயத்தில் லெபனான் ராணுவம், பிரான்ஸ் ராணுவத்தினருடனும் இணைந்து செயல்படும்”, என்று அந்த அதிகாரி கூறுகிறார்.
இஸ்ரேலின் கவலைகளைக் குறிப்பிட்டு, ”தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் பயங்கரவாதத் தளங்கள் மீண்டும் உருவாக அனுமதிக்கப்பட மாட்டாது” என்று அதிபர் பைடன் கூறினார்
,ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா தாக்குதல் நடத்த முயற்சித்தால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும் என்று நெதன்யாகு எச்சரித்தார்.
ஒப்பந்த மீறல்களுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் உரிமை கோருகிறது
“லெபனானில் ‘அமெரிக்காவின் முழு புரிதலுடன்’ ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் முழு சுதந்திரத்தை இஸ்ரேல் வைத்திருக்கும்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
“ஒப்பந்தத்தை மீறி, ஹெஸ்பொலா ஆயுத தாக்குதல் நடத்த முயற்சித்தாலோ, எல்லையில் பயங்கரவாத உட்கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்கமுயற்சித்தாலோ, ராக்கெட்டை ஏவினாலோ, சுரங்கம் தோண்டினாலோ இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தும்”, என்று நெதன்யாகு எச்சரித்தார்.
“ஹெஸ்பொலா அல்லது வேறு யாரோ இந்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலை நேரடியாக அச்சுறுத்தினால், சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை இருக்கிறது” என்று இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் பைடன் ஆதரித்தார்.
மேலும் இந்த ஒப்பந்தம் லெபனானின் இறையாண்மையையும் மதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
தேவைப்பட்டால் திருப்பி தாக்குவதற்கான உரிமையை இஸ்ரேல் கோரியுள்ளது. ஆனால் இதனை லெபனான் நிராகரித்துள்ளதால், இஸ்ரேலின் நிலைப்பாடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக நம்பமுடியவில்லை என கருதப்படுகின்றது.
இந்த பிரச்னையை தீர்க்க, இஸ்ரேலின் இந்த நிலைபாட்டை ஆதரித்து, அமெரிக்கா ஒரு கடிதம் அனுப்பக்கூடும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.