காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிந்து விட்டது.. ஹமாஸ் மீண்டும் எழாது என உறுதி 
                  
                     20 Nov,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இந்நிலையில், காசா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் மீண்டும் அதிகாரத்திற்கு வராது என்று கூறியுள்ளார். பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறதது. பதற்றம் உச்சம் எட்டும்போது அது உயிர் பலிகளை ஏற்படுத்துகிறது. 
	 
	இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை அறிவித்து. "ஹமாஸ் தலைவர் மரணத்துடன் போர் முடிகிறதா? பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும்? " போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது. இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். 
	 
	அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 45,000 பேர் பாலஸ்தீனத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் போர் நிறுத்தப்படாமல் தொடர்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
	 
	இப்படி இருக்கையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசாவுக்கு சென்றிருக்கிறார். போர் தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சரும் காசாவுக்கு சென்றிருக்கின்றார். காசாவில் பேட்டியளித்த நெதன்யாகு, "ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அதேபோல இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும்,
	 
	 அவர்களை மீட்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இன்னும் 101 பணயக்கைதிகள் மீட்கப்படாமல் இருக்கின்றனர். போரின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து இஸ்ரேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. "குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக தலையிட்டு கூட போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இதற்கெல்லாம் கவலைப்படாமல் காசாவுக்கு சென்று நெதன்யாகு பேட்டியளித்திருப்பது, பாலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.