அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி வழங்கியுள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போரை மேலும் தீவிரப்படுத்தக் கூடும் என்று கூறி, இதற்கு முன்பு இந்த அனுமதியைத் தர அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வந்தது.
ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடன், புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த பெரிய அளவிலான கொள்கை மாற்றம் நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்பின் வருகை, வருங்காலத்தில் யுக்ரேனுக்கான அமெரிக்காவின் உதவி தொடர்வதை கேள்விக்குறியாக்கியுள்ளது.
அமெரிக்க ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு பைடன் அனுமதி - போரின் போக்கு மாறுமா?
விளம்பரம்
யுக்ரேன்-ரஷ்யா போரில் இருந்து மற்ற நாடுகளின் ராணுவத் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதென்ன?
யுக்ரேன் படை முன்னேற்றம்: இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷ்ய மண்ணில் முதல் ஆக்கிரமிப்பு - என்ன நடக்கிறது?
ஆனால் அமெரிக்கா இந்த ஏவுகணைகளை ரஷ்ய நாட்டுக்குள் பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை.
லாக்ஹீட் மார்டின் நிறுவன தயாரிப்பான இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள், யுக்ரேனுக்கு வழங்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இது 300 கி.மீ வரை (186 மைல்கள்) பயணித்து இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
இந்த ஆயுதங்களை ரஷ்யாவுக்குள் பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது தொடர்பாக அந்த நாடு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. ஒரு கையை முதுகுக்கு பின்னால் கட்டிக் கொண்டு சண்டையிட சொல்வது போல் இது உள்ளது என்று அந்த நாடு குற்றம்சாட்டியது.
ரஷ்ய துருப்புகளுக்கு ஆதரவாக வட கொரிய ராணுவத்தினர் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதை தொடர்ந்து தன்னுடைய கொள்கையில் அமெரிக்கா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ரஷ்ய பிரதேசம் யுக்ரேன் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அமெரிக்கா இந்த போரில் யுக்ரேனுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. இந்த காரணத்தால், தற்போது அதிபராக இருக்கும் பைடன், தான் அதிகாரத்தில் இருக்கப் போகும் இந்த குறுகிய காலத்தில் யுக்ரேனுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
யுக்ரேனின் ராணுவத்தை வலுப்படுத்துவதன் மூலமாக அமைதிப் பேச்சுவார்த்தையில் யுக்ரேன் தன் தரப்பு நியாயங்களை வலிமையாக முன்வைக்க வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
ரஷ்யாவுக்குள் யுக்ரேன் எங்கெல்லாம் தாக்கலாம்?
இந்த ஏவுகணையின் மூலமாக யுக்ரேன் ரஷ்யாவுக்குள் உள்ள இலக்குகளை குறிவைக்க இயலும். முதலில் குர்ஸ்க் பிராந்தியத்தை தக்க வைப்பதை இலக்காகவே கொண்டு யுக்ரேன் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது யுக்ரேனிய படை இந்த பிராந்தியத்தில் சுமார் 1000 சதுர கிலோ மீட்டர் பரப்பை தன் வசம் வைத்துள்ளது.
யுக்ரேன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள், ரஷ்யாவும் வடகொரியாவும் இதற்கு கூட்டாக பதில் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கின்றனர்.
யுக்ரேன் இந்த ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளை தங்களின் பாதுகாப்பிற்காகவும், ரஷ்யாவின் ராணுவ தளங்கள், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் ஆயுத கிடங்குகள் போன்ற இலக்குகளை தாக்கி அழிக்கவும் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரின் போக்கை மாற்ற இந்த ஏவுகணைகள் போதுமானதாக இருக்காது. இது போன்ற கொள்கை மாற்றங்கள் நிகழலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஷ்யா, ஏற்கனவே ஜெட்கள் போன்ற தனது ராணுவ தளவாடங்களை தனது நாட்டின் உள் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது.
ரஷ்ய துருப்புகள் ஏற்கனவே கிழக்கு பிராந்தியத்தில் முன்னேறி வருகின்ற சூழலில் யுக்ரேனுக்கு இந்த ஆயுதங்கள் அணுகூலமான சூழலை வழங்கலாம்.
"இது ஒன்றும் இறுதியான முடிவு இல்லை," என்று கூறுகிறார் கியவ் நகரில் இருக்கும் மேற்கத்திய தூதரக அதிகாரி ஒருவர். தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், யுக்ரேனுக்கான ஆதரவை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது என்று கூறினார்.
இது போரில் ரஷ்யாவின் இழப்பை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.
ஒபாமா நிர்வாகத்தில் பாதுகாப்புத்துறை துணை செயலாளராக பணியாற்றிய ஈவ்லின் ஃபார்காஸ், எவ்வளவு ஆயுதங்கள் வழங்கப்படும் என்ற கேள்விகளும் தற்போது எழுகின்றன என்று கூறினார்.
"எத்தனை ஏவுகணைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி இருக்கிறது. தற்போது யுக்ரேனுக்கு ஏவுகணைகளை வழங்க போதுமான ஏவுகணைகள் இல்லை என்று அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
ஃபார்காஸ், "இந்த ஏ.டி.ஏ.சி.எம்.எஸ். ஏவுகணையை பயன்படுத்தி, ரஷ்யாவை க்ரைமியாவுடன் இணைக்கும் கெர்ச் பாலம் போன்ற இலக்குகளை தாக்கினால், யுக்ரேனில் மனதளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும்," என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அனுமதி மற்ற ஆயுத பயன்பாடுகளின் அனுமதிகளுக்கும் வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணத்திற்கு, பிரிட்டனும், பிரான்ஸும் ரஷ்யாவுக்குள் ஸ்டோர்ம் ஷேடோ (Storm Shadow) என்ற ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதி வழங்கலாம். அமெரிக்காவின் ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் ஏவுகணைகளில் இருக்கும் சிறப்பம்சங்களைப் போன்றே இந்த ஏவுகணைகளும் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த ஸ்டோர்ம் ஷேடோ ஏவுகணைகள் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டினர் கூட்டாக உருவாக்கிய ஏவுகணைகள் ஆகும்.
இந்த போர் மேலும் தீவிரமடையக் கூடும் என்ற எண்ணத்தால் இது நாள் வரை இந்த ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு மறுப்பு தெரிவித்து வந்தது பைடன் நிர்வாகம்.
ரஷ்ய அதிபர் புடின் இந்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட போது, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்கள் ரஷ்ய மண்ணை தாக்க பயன்படுத்தினால் அதனை நேட்டோ நாடுகள் நேரடியாக போரில் பங்கேற்பதாகவே கருத முடியும் என்று எச்சரித்தார்.
இது நிச்சயமாக போரின் தன்மையை மாற்றக் கூடும் என்று புடின் செப்டம்பர் மாதம் தெரிவித்தார். "நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுகின்றன என்பது தான் இதன் பொருள்," என்று அவர் கூறினார்.
யுக்ரேனுக்கு நவீன டேங்குகள் மற்றும் போர் விமானங்களை வழங்குவது 'சிவப்பு கோட்டை' மீறுவதாகும் என்று கூறி அதற்கு ஏற்கனவே ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இருப்பினும் கூட, ரஷ்யாவுடன்நேரடியாக போரை தூண்டாத வகையில் யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகளின் ராணுவ உதவிகள் தொடர்கின்றன.
நேட்டோவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் குர்த் வோல்கர், "அமெரிக்காவின் ஆயுதங்களை யுக்ரேன் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை விதித்து, யுக்ரேன் தற்காப்பு விவகாரத்தில் தன்னிச்சையாக நியாயமற்ற முறையில் முடிவுகளை அமெரிக்கா எடுத்துள்ளது," என்று கூறியிருந்தார்.
"ஏ.டி.ஏ.சி.எம்.எஸ். ஏவுகணைகளை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு தன்னிச்சையானது. அது ரஷ்யாவை மேலும் தூண்டிவிடக் கூடும் என்ற அச்சத்தால் எடுக்கப்பட்டது" என்றும் விமர்சித்தார்.
"தற்போது, இந்த கொள்கை முடிவை பொதுவெளியில் எடுத்திருப்பது தவறானது. ஏன் என்றால் இது ரஷ்யா தன்னை தயார் நிலையில் வைத்திருக்க வழிவகை செய்யும்" என்றும் அவர் கூறினார்.
டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வர இன்னும் இரண்டு மாதங்களெ உள்ளன.
ஏற்கனவே, யுக்ரேன் போரை நிறுத்துவது தொடர்பாக தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்த ஏவுகணைகளை பயன்படுத்த அவர் மறுப்பு தெரிவிக்கலாம்.
இந்த கொள்கையை அவர் தொடருவாரா என்பது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் டொனால்ட் டிரம்ப் வெளியிடாத சூழலில் அவரின் கூட்டாளிகள் பலரும் இந்த மாற்றத்தை விமர்சனம் செய்துள்ளனர்.
டிரம்பின் மகன், டிரம்ப் ஜூனியர், "ராணுவ ஆயுத உற்பத்தியாளர்கள், என்னுடைய அப்பா மீண்டும் ஆட்சிக்கு வந்து அமைதியை ஏற்படுத்தி மக்களை காப்பாற்றுவதற்கு முன்பாக, மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் முனைப்பில் செயல்படுகின்றனர்," என்று சமூக வலைதளத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா யுக்ரேனுக்கு இனிமேல் ராணுவ உதவிகளை வழங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரின் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள மற்ற உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளனர். யுக்ரேனுக்கு ஆயுதங்களை விரைவாக வழங்கி, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை யுக்ரேன் நிர்பந்திக்க வழிவகை செய்ய வேண்டும் என்று டிரம்பின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அறிவிக்கப்பட்டுள்ள மைக்மல் வால்ட்ஸ் கூறியுள்ளார்.
இதில் எந்த முடிவை டொனால்ட் டிரம்ப் எடுப்பார் என்று தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் உட்பட பல ஆயுதங்களை யுக்ரேனுக்கு வழங்குவது நிறுத்தப்படும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
"எங்களுக்கு இது கவலை அளிக்கிறது. டிரம்ப் இந்த கொள்கையை மாற்றமாட்டார் என நம்புகிறோம்," என்று யுக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலேக்சி கோஞ்சரென்கோ பிபிசியிடம் கூறினார்.