பாகிஸ்தானில் காற்று மாசு உச்சம்: ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி
18 Nov,2024
பாகிஸ்தானில் காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 19 லட்சம் பேர் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், வயதானவர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிற நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தல், வாகனப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுவருகிறது.
எனினும், முக்கிய நகரங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. லாகூரில் காற்று தரக் குறியீடு 1000-த்தை தாண்டியுள்ளது. சமீபத்தில் முல்டானில் காற்று தரக் குறியீடு 2,000-த் தாண்டியது.
காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 0-50 வரையில் இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாகவும், 51 – 100 (திருப்தி) , 101 - 200 (பரவாயில்லை), 201 – 300 (மோசம்), 301 – 400 (மிக மோசம்), 401 – 450 (தீவிரம்), 450-க்கு மேல் (மிகத் தீவிரம்) என்று வகைப்படுத்தப்படுகிறது.