“அமெரிக்காவை தொடர்புகொள்ள நாங்கள் தயார். - ரஷ்ய வெளியுறவு அமைச்சர் விவரிப்பு
15 Nov,2024
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ்
மாஸ்கோ: "டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவுடன் தொடர்புகொள்ள ரஷ்யா தயார். ஆனால், அமெரிக்கா பக்கமே பந்து உள்ளது" என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், ரஷ்யா அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் செர்கி லாரோவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ரஷ்யா தயாராக உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செர்கி லாரோவ், "வால்டாய் இன்டர்நேஷனல் டிஸ்கஷன் கிளப்பின் கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், தான் எப்போதும் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார். தகவல் தொடர்புக்கு இடையூறு விளைவித்தது நாங்கள் அல்ல. தற்போது பந்து என்பது அமெரிக்க பக்கம் உள்ளது (Ball is in US court)” என்று பதிலளித்தார். மேலும் அவர், “எங்களிடம் எதிர்பார்ப்புகளும் இல்லை; அனுமானங்களும் இல்லை. உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டால் நாங்கள் அதனை ஆய்வு செய்வோம்” என்று குறிப்பிட்டார்.
ரஷ்யா மற்றும் சீனா தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாடு தொடர்பாக பேசிய லாரோவ், "டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமரிக்க நிர்வாகத்துக்கு, சீனாவைக் கட்டுப்படுத்துவது முன்னுரிமைப் பணியாக இருக்கும். அதே நேரத்தில், ரஷ்யாவை இன்றைய அச்சுறுத்தல் என்று அமெரிக்கா கருதுகிறது. சீனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஜோ பைடன் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டது. டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்துக்கும் இது ஒரு முன்னுரிமையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். மேலும் நாங்கள் இன்றைய ‘அச்சுறுத்தலாக’ இருக்கிறோம். ரஷ்யா ஒரு சக்திவாய்ந்த நாடு என்பது நிரூபிக்கப்படுவதையோ அல்லது மேற்கத்திய நாடுகளின் நம்பகத்தன்மை குறைவதையோ அமெரிக்கா அனுமதிக்காது.
எந்தவொரு அமெரிக்க நிர்வாகமும், பலவீனமான ரஷ்யாவையே விரும்புகிறது. ரஷ்யாவை ஒரு போட்டியாகக் கருதி அடக்க முயல்கிறது. அமெரிக்காவை விட செல்வாக்கு மிக்க நாடு உலகில் வேறு எதுவும் இருக்கக்கூடாது என்பதை அமெரிக்கர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். அமெரிக்கா தனது நற்பெயருக்கு மட்டுமே அதிக அக்கறை காட்டுகிறது. மற்றவர்களின் குறிப்பாக உக்ரைனியர்களின் நிலையைப் பற்றி அது கவலைப்படுவதில்லை" என குறிப்பிட்டார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் எப்போது போர் நிறுத்தம் ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் அளித்த செர்கி லாரோவ், "நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு சொல்லவில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் மீண்டும் மீண்டும் கூறி உள்ளார்" என தெரிவித்தார்.