கனடாவில் உள்ள வெள்ளையர்கள் ஐரோப்பா, இஸ்ரேலுக்கு செல்ல வேண்டும்: காலிஸ்தான் தீவிரவாதிகள் புதிய கோஷம்
15 Nov,2024
டொரன்டோ: கனடாவில் 4 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 20 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அவர்களில் 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள் ஆவர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரி போராடிய காலிஸ்தான் தீவிரவாதிகளில் பலர் கனடாவில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவின் டொரன்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் அண்மையில் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அப்போது காலிஸ்தான் தீவிரவாதிகள் கோயில் மீதும், பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இலங்கையை பூர்விகமாக கொண்ட இந்துக்கள், நேபாளத்தை சேர்ந்த இந்துக்கள், வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள் கனடாவில் பல்வேறு கோயில்களை கட்டி உள்ளனர். இந்த கோயில்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது கிடையாது. ஆனால் இந்திய வம்சாவளியினர் கட்டிய இந்து கோயில்கள் மீது மட்டும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறார். காலிஸ்தான் தீவிரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளை அவர் வெளியேற்றி உள்ளார். கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஜஸ்டின் செயல்பட்டு வருகிறார். இதன்காரணமாக அவர்கள், கனடாவின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றனர்.
இந்த சூழலில் கனடா அரசுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கோஷத்தை காலிஸ்தான் தீவிரவாதிகள் எழுப்பி உள்ளனர். "கனடாவில் வசிக்கும் வெள்ளையின மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் ஐரோப்பிய நாடுகள் அல்லது இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சார்பில் அண்மையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் புதிய கோஷத்தை எழுப்பி, கனடா அரசுக்கு சவால் விடுத்து உள்ளனர்.
இதுதொடர்பான வீடியோவை, கனடாவின் நேஷனல் டெலிகிராப் ஊடகத்தின் மூத்த செய்தியாளர் டேனியல் போர்டுமேன் வெளியிட்டு உள்ளார். அதோடு அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “சர்ரே நகரில் காலிஸ்தானியர்கள் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள், கனடா தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர். வெள்ளையின மக்கள் ஐரோப்பா அல்லது இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று காலிஸ்தானியர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு பேச நாம் அனுமதிக்கலாமா? நமது வெளியுறவு கொள்கையை வரையறுக்க இவர்கள் யார்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.