ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் தொடரும்: இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் அறிவிப்பு
13 Nov,2024
லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 165 ஏவுகணைகளை வீசினர். இதில் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் அழித்தது. சில ஏவுகணைகள் இஸ்ரேலின் பினா நகரில் விழுந்தன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிகாலை முதல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து குண்டுகளை வீசின. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியதாவது:
போர் நிறுத்தம் தொடர்பாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆயுதங்களை கடத்த மாட்டோம் என்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உறுதி அளிக்க வேண்டும். வாக்குறுதி அளித்தால் மட்டும் போதாது. அந்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். அதுவரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படாது. ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படும். எங்களது முழு பலத்தோடு தாக்குதலை தொடருவோம். ஈரான் அரசுக்கு இஸ்ரேல் ராணுவத்தின் வலிமையை புரிய வைத்துள்ளோம். ஈரானின் அணு ஆயுத திட்டங்களை தகர்க்க இஸ்ரேல் உறுதி பூண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லாவின் ஊடக பிரிவு தலைவர் முகமது ஆரிப் கூறும்போது, “போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலுடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனினும் இருதரப்புக்கு இடையே மூன்றாம் தரப்பு மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.