தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தால் இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீன மக்களை நாடு கடத்த புது சட்டம்: நாடாளுமன்றம் ஒப்புதல்
08 Nov,2024
இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்களின் உறவினர்களை நாடு கடத்தும் சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேல் – காசா, லெபனான் இடையே போர் நடைபெற்றாலும் கூட, இஸ்ரேல் நாட்டில் பாலஸ்தீன மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றம் இயற்றியுள்ள புதிய சட்டத்தில், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்களின் உறவினர்களை நாடு கடத்தும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இச்சட்டத்திற்கு ஆதரவான வாக்குகள் கிடைத்ததால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இந்த சட்டம் அமலுக்கு வரும். இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் மற்றும் கிழக்கு ஜெருசலேமில் வசிப்பவர்களில் தீவிரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்தவர்கள் அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது அடையாளம் காண்பவர்கள் ஆகியோருக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பத்தினரின் வீடுகளை இடித்துத் தள்ளப்படும்.
இஸ்ரேலில் வசிக்கும் குற்றம்சாட்டப்பட்ட பாலஸ்தீன குடும்ப உறுப்பினர்கள், அவர்களது சொந்த குடிமக்கள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதிக்கு அல்லது வேறு இடங்களுக்கு நாடு கடத்தப்படுவதற்கு இந்த சட்டம் அனுமதிக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் ஜனநாயகக் கழகத்தின் மூத்த ஆய்வாளரும் இஸ்ரேலிய ராணுவத்தின் சட்ட நிபுணருமான எரான் ஷமிர்-போஹ்ரர் கூறுகையில், ‘இந்த சட்டம் முற்றிலும் அரசியலமைப்பிற்கு எதிரானது; இஸ்ரேலின் மதிப்புகளுக்கு முரணானது’ என்றார்.