நைஜீரியாவில் 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு?
03 Nov,2024
ஆப்ரிக்காவில் அதிக மக்கள் தொகையுள்ள நாடாக நைஜீரியா திகழ்கிறது. 21 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் எண்ணெய் வளம் இருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், பெரும்பாலான மக்கள் பசி, பட்டினியால் வாடுகின்றனர். நாட்டின் அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஊழலில் திளைத்து பொதுச் சொத்துகளை சுரண்டி கொழுத்து வருகின்றனர்.
அதேசமயம் வாழ்க்கை நடத்துவதற்கான அடிப்படை செலவினங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்டில் வேலை வாய்ப்பு கோரியும் விலைவாசி உயர்வை கண்டித்தும் போராட்டத்தில் குதித்த மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் உயிரிழந்தனர். நுாற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள 29 சிறுவர், சிறுமியர், அபுஜாவில் உள்ள நீதிமன்றத்தில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தேசத் துரோகம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.