லெபனானின் பால்பெக் நகர மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
31 Oct,2024
லெபனானின் பால்பெக் நகரில் வசிக்கும் மக்கள் அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீனம், லெபனான் நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாடுகளின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இத் தாக்குதலில், பாலஸ்தீனத்தில் கடந்த ஓராண்டில் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். லெபனானில் 2800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், லெபனானின் கிழக்கில் உள்ள பால்பெக் நகரில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நகரை ஒட்டிய பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பண்டைய ரோமாபுரி காலத்து கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
* ஐநா எச்சரிக்கை
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளோருக்கு உணவு மற்றும் மருந்து சப்ளை செய்வதை தடுக்கும் நோக்கில் ஐநா அமைப்புக்கு, இஸ்ரேல் தடை விதித்துள்ளதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தடையை அகற்றாவிட்டால், சர்வதேச சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக, ஐநா கூறியுள்ளது.