ரஷ்யாவின் சொத்துக்களை பறித்து உக்ரைனுக்கு கடனாக கொடுக்கும் ஜி-7 நாடுகள்
29 Oct,2024
ஜி-7 கூட்டமைப்பில் உள்ள உலகின் மிக பெரிய பணக்கார நாடுகளின் தலைவர்கள் ஏற்கனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துக்களில் இருந்து 5000 கோடி டொலர்களை உக்ரைனுக்கு கொடுக்க முடி வெடுத்துள்ளனர்.
இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் அங்கம் வகிக்ககூடிய ஜி-7 நாடுகள் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு மாறாக மேலும் அதிகரிக்கவும் ரஷ்யாவின் கோபத்தை தூண்டும் வேலைகளையுமே செய்து வருகின்றன.
30 ஆயிரம் கோடி டொலர்களுக்கும் அதிகமான ரஷ்ய சொத்துக்களை மேற்கு நாடுகள் முடக்கி வைத்துள்ளன. இந்த பணத்தில் இருந்து தான் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஆயுதங்கள் வாங்குவதற்காக உக்ரைனுக்கு ஜி – 7 நாடுகள் கொடுக்க முடிவெடுத்துள்ளன.
அந்தப் பணத்தையும் இலவசமாக அல்லாமல் கடனாக கொடுத்து மீண்டும் வசூலிக்க இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன. ஜி – 7 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க தங்கள் சொந்த நாட்டின் மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் இருந்து எடுத்து தொடர்ந்து உக்ரைன் போருக்கு உதவி வருகின்றன.
இந்நிலையில் உலகளவில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி, பொதுத்தேர்தல், உள்நாட்டு அரசியல் சூழல் மோசமடைந்து வரும் காரணத்தால் தங்கள் கஜானாவில் இருந்து பணத்தை கொடுப்பதற்கு பதிலாக ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்களை சூறையாடத் தொடங்கியுள்ளன.