காசா மருத்துவமனையில் தீவிரவாதிகள் என 100 பேரை இஸ்ரேல் பிடித்துச் சென்றது
28 Oct,2024
காசா மருத்துவமனையில் சோதனை நடத்திய இஸ்ரேல் ராணுவம், தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 100 பேரை பிடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தி உள்ளது. காசாவில் ஓராண்டுக்கும் மேலாக போர் புரிந்து வரும் இஸ்ரேல் ராணுவம், கடந்த 3 வாரமாக வடக்கு காசாவை சீல் செய்து கொடூர தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு நிவாரண முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதால் தற்போதைய ஒரே பாதுகாப்பான இடமாக மருத்துவமனைகள் மட்டும் உள்ளன. இதனால்,
டாக்டர்கள் போர்வையில் பல ஹமாஸ் போராளிகள் மருத்துவமனையில் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மருத்துவமனைகளில் திடீர் ரெய்டு நடத்தி வருகிறது. இதில் பெய்ட் லஹியாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் இருந்து 44 ஆண் பணியாளர்கள் உட்பட 100 பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என அவர்களிடம் இஸ்ரேல் ராணுவம் விசாரிக்கிறது. இந்த மருத்துவமனையில் போரில் காயமடைந்த 200 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதற்கிடையே, காசாவில் போரால் பலியானோர் எண்ணிக்கை நேற்று 43 ஆயிரத்தை தாண்டியது.