ஹிஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இஸ்ரேல் பிரதமரின் படுக்கையறை ஜன்னல் சேதம், 
                  
                     23 Oct,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 இஸ்ரேல் – காசா இடையிலான ஓராண்டு போரில் இதுவரை 42,718 பேர் கொல்லப்பட்டனர். 1,00,282 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் காசாவின் பெரும்பகுதியை அழித்த இஸ்ரேல், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கியிருக்கும் லெபனான் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அதேநேரம் காசாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது. இந்நிலையில் நேற்று வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல் ெலபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.
	 
	 
	 
	அதேநேரம் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று இஸ்ரேல் நகரமான டெல் அவிவின் வடக்கே சிசேரியாவில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து ஹிஸ்புல்லாவின் ட்ரோன் விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த ட்ரோன் தாக்குதலில் பிரதமரின் படுக்கையறை ஜன்னல்கள் உடைந்து சேதமானது. இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், அவரது குடும்பத்தினரும் சம்பவம் நடந்த சிசேரியாவில் இல்லை என்பதால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.